பேச்சு நடத்த அதிமுக இரு அணிகளிலும் குழுக்கள் அமைப்பு
இணைப்புப் பற்றி பேச்சு நடத்த அதிமுகவின் இரு அணிகளிலும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டன.


இணைப்புப் பற்றி பேச்சு நடத்த அதிமுகவின் இரு அணிகளிலும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி (அதிமுக அம்மா அணி) சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் அவருடன் சேர்த்து 8 பேர் கொண்ட குழுவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி (அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அவருடன் சேர்த்து 7 பேர் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர்: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஏப்.21) காலை வந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எம்.பி., ஆர். வைத்திலிங்கம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
கே.பி.முனுசாமி தலைமையில்... அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அவரையும் சேர்த்து பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 7 பேரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மாஃபா. க. பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன்.
மேலே குறிப்பிட்ட ஏழு பேரும் அதிமுக அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவினருடன் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இனி தனித் தனி பேட்டி கிடையாது: முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
யாரும் தனித்தனியாகப் பேட்டி கொடுக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இனி அதிமுக அம்மா அணியின் தலைவர் வைத்திலிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிப்பார்.
குறைகளைக் கூறலாம்: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தினமும் வரும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளிடம் குறைகளைச் சொல்லலாம். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் எப்போது வேண்டுமானலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆட்சி நிலைக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் என்றார் எஸ்.பி.வேலுமணி.
விரைவில் நல்லது நடக்கும்

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அவரையும் சேர்த்து ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளைத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இரு அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்லது நடக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...