ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘நிதி அயோக்’ கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீணடித்துவிட்டார்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடனில் தத்தளிக்கும் தமிழகத்தின் நிலையை மாற்ற முயற்சிக்காமல் ‘நிதி அயோக்’ கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீணடித்துவிட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

தினமணி

கடனில் தத்தளிக்கும் தமிழகத்தின் நிலையை மாற்ற முயற்சிக்காமல் ‘நிதி அயோக்’ கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீணடித்துவிட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மிகப் பெரிய கடன் சுமையில் தமிழகத்தை தள்ளிய அதிமுக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தில்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, குறைந்தபட்ச அளவிலாவது பலன்கள் கிடைத்து, நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாடு ஓரளவேனும் மீளாதா என்ற ஏக்கம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் - சொல்லவும் முதல்வர் தவறி விட்டார்.
 
தமிழகத்தில் “விஷன் 2023” பற்றி விலாவாரியாக பேசியிருக்கும் முதல்வர், அந்த திட்டத்தினை செயல்படுத்த துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பதை மறந்து விட்டு, ஏதோ அந்த திட்டத்தின் கீழ் “உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக மக்களுக்கு செய்து கொடுக்க” செயல்பட்டுக் கொண்டிருப்பது போல் நிதி அயோக் கூட்டத்தில் பிரதமர் முன்னிலையிலேயே இமாலயப் பொய்யை கூறியிருக்கிறார்.
 
தமிழகத்தில் குடிநீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைக் கூட மூட மனமில்லாமல், அந்த சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக வகை மாற்றியிருக்கும் அதிமுக அரசு, தமிழக மக்களுக்கு “உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை” அளிப்பதற்கு செயல்பட்டு வருவதாக கூச்சமின்றி பொய் சொல்லியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய வங்கிகளில் கொடுக்கப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து கொடுத்து, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை காப்பாற்றுங்கள், என்று கோரிக்கை வைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறாரர்கள். அந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை.
 
அதிமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை சீர்கேட்டால் இன்றைக்கு தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது. அது பற்றி நிதி அயோக் கூட்டத்தில் பேசி, தமிழக அரசின் நிதி நிலைமயை சீராக்க எதையும் பேசவில்லை. இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளும், புதிய அணைகளுமே. ஆனால் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அண்டை மாநிலங்களுடனான இந்த முக்கிய தடுப்பணை பிரச்னை குறித்து வாய் திறக்கவில்லை.
 
தமிழகத்தில் நதி நீர் இணைப்புத் திட்டங்களை கிடப்பில் போட்டது அதிமுக அரசு. குறிப்பாக தாமிபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் முக்கால்வாசிப் பணிகளை கழக அரசு முடித்து விட்டுச் சென்ற நிலையில் அந்த திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் நிதி அயோக் கூட்டத்தில் நதி நீர் இணைப்பு பற்றி பேசியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “அத்திக்கடவு - அவினாசி” திட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.
 
மாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடப் போகிறது என்ற அச்சத்தில், ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் வலியுறுத்திப் பேசிவிட்டு, தமிழகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, அண்டை மாநிலங்கள் தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்னை பற்றி வாய் திறக்காமல் வந்திருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்துவிட்ட துரோகமாகும். அதைவிட “உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை” தமிழக மக்களுகச் செய்து கொடுக்கும் “விஷன் 2023” திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமரும், அனைத்து மாநில முதல்வர்களும் அமர்ந்திருந்த “நிதி அயோக்” கூட்டத்தில் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகை கட்டவிழ்த்து விட்டு வந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகள் குறித்தோ, மாநில அரசு கேட்ட வெள்ளம், வர்தா, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும், தமிழக மக்களையும் மீட்டெடுக்க கேட்ட 88 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்குங்கள் என்பது குறித்தோ “நிதி அயோக்” கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கூறாதது உள்ளபடியே கவலையளிக்கிறது. தமிழகத்தில் எதிர்கட்சிகளின் வற்புறுத்தலால், “நிதி கேட்டோ” “திட்டங்கள் கேட்டோ” ஏதோ பெயரளவில் கடிதம் எழுதிவிட்டு பிரதமரையோ, அண்டை மாநில முதல்வர்களையோ நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அந்த கடிதங்களில் குறிப்பிட்டுச் சொன்ன கோரிக்கைகள், பிரச்னைகள் பற்றிக் கூட முதல்வராக இருப்பவர் பேச மறுப்பதுடன், மாநில உரிமைகளை எப்படி தாரை வார்த்து தமிழக மக்களை துன்பத்தில் துயரத்தில் சிக்க வைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
 
ஆகவே “நானும் கச்சேரிக்குப் போனேன்” என்ற போக்கில் “நிதி அயோக் கூட்டத்தில்” கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் தமிழக நலன்கள், தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “நிதி அயோக்” கூட்டத்தில் எடுத்துரைக்காமல் வந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.