/

தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் ‘அவசர ஆலோசனை’!

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பரப்பான பேட்டி அளித்திருக்கும் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:34 pm

DIN

சென்னை: அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பரபரப்பான பேட்டி அளித்திருக்கும் சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும், அது தொடர்பான பொறுப்பு தனக்கு இருப்பதாகவும்  தெரிவித்திருந்தார். 

அதேநேரம் அதிமுக அம்மா அணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் கட்சியின் தலைமை  அலுவலகத்தில்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்தான் தற்பொழுது தலைமைச் செயலகத்தில் எட்டு அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலசோனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது. 'நீட்' தேர்வு அனுமதி விவகாரம். ரேஷன் மானியம் ரத்து உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும்,கட்சியில் இரு அணிகள் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நேரத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.