/

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்மயுத்தம் தொடரும்: ஓ.பன்னீர்செல்வம்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

DIN

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடுவுக்கு வாழ்த்துக்கள். மக்களின் முக்கிய பிரச்னைகளான குடிநீர், டெங்கு உள்ளிட்டவற்றை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் தான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. இது குறித்து விமர்சித்துள்ள துரைமுருகனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
அவர் தொடர்ந்து இரண்டு அணிகளும் இணையும் என்று கூறிக்கொண்டே தான் இருக்கிறார். எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றார் அவர்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், மு. பரஞ்ஜோதி, டி.பி. பூனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

"பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்'

திண்டுக்கல், ஆக. 6: திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு, பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்துக்கு (விமான நிலையத்தில் கத்தியுடன் வந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம்), பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்பது தெளிவாகிறது.
அதிமுகவின் 3 அணிகளும் இணைந்து கட்சியைப் பலப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்வது அவரது சொந்த கருத்து. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து, அதிமுகவில் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் (தினகரன்) தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்றார்.

கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது, அதிமுக கரை வேஷ்டி அணிந்த நபர் ஒருவர், ஓ.பி.எஸ்.ûஸ முண்டியத்து நெருங்க முயன்றார். அவரை மத்திய பாதுகாப்பு படையினர் தடுத்தனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் அந்த நபருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அச்சமயம் அந்த நபர் இடுப்பில் வைத்திருந்த சிறிய கத்தி கீழே விழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த நபரை இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர்.
இதை கவனித்த, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், போலீஸ் வாகனத்துக்குள் இருந்த அந்த நபரை தாக்கினர்.
இதையடுத்து போலீஸார் அந்த நபரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் சோலைராஜன் (53) என்பதும், ஆகஸ்ட் 27}ஆம் தேதி தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்துள்ள நிலையில், திருமண விழாவின்போது பேனர் அச்சடிப்பதற்கு ஓ.பி.எஸ்.ஸýடன் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படம் எடுக்க திட்டமிட்டு கூட்டத்தில் புகுந்து செல்ல முயன்றது தெரியவந்தது.
மது போதையிலிருந்த அவர், ஓபிஎஸ் வருகைக்காக விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தபோது, அங்கு ஒரு செடிக்கு அருகே கிடந்த கத்தியை எடுத்து வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திகணேஷ் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கிடைத்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது இல்லத் திருமணத்தை கருத்தில் கொண்டு அத்துமீறி விமான நிலையத்துக்குள் நுழைந்தது உள்ளிட்ட இரு சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.