கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம்: டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த டிரைகோஸ்டோமி


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த டிரைகோஸ்டோமி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவரது தொண்டைப் பகுதியில் சிறு துளையிட்டு வைக்கப்பட்டிருந்த குழாயும் அகற்றப்பட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
காந்தக் குரலுக்கு சொந்தக்காரரும் ஓய்வறியாச் சூரியனாக 80 ஆண்டுகால பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான திமுக தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் நோயை சரிசெய்ய தொண்டையில் சிறு துளையிட்டு, ஒரு குழாய் பொருத்தி மருத்துவர்கள் டிரைகோஸ்டோமி சிகிச்சை அளித்தனர்.
பின்னர், வீடு திரும்பிய அவர், மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவர் தொலைகாட்சி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.
அதன்பின்னர், சில தினங்களில் வீடு திரும்பிய அவரது உடல்நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி தீவிர அரசியலில் அவர் ஈடுபடாமலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.
கருணாநிதி முன்பு போல் செயல்படும் நிலையில் இருந்தால், தமிழக அரசியலின் இன்றைய சூழ்நிலையே வேறு விதமாக இருந்திருக்கும் என பேசப்பட்டு வந்தது.
அத்தகைய சூழலில், திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதை அடுத்து, டிரைகோஸ்டோமி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. கருணாநிதியின் தொண்டைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிறு குழாயும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று நேரில் சந்தித்தார்.
அப்போது, ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்று திரும்பியது குறித்து அவரிடம் கி. வீரமணி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
இதேபோல், நேற்று கருணாநிதியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...