ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை சசிகலா மீதான அவப்பெயரை நீக்க உதவும்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை சசிகலா மீதான அவப்பெயரை நீக்க உதவும் என்று அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை சசிகலா மீதான அவப்பெயரை நீக்க உதவும்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை சசிகலா மீதான அவப்பெயரை நீக்க உதவும் என்று அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவை, அக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியது:
ஓ.பன்னீர்செல்வத்தை சில அமைச்சர்கள் சந்தித்தது ஒன்றும் பெரியதல்ல. அதுகுறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணையப் போவதாகக் கூறப்படுகிறது. இரு அணிகளும் இணைவது அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிரானதாகும்.
வியாபார சிந்தனை கொண்ட ஒருசில அரசியல்வாதிகள், அதிகாரத்தை அனுபவிப்பதிலே கவனமாக இருப்பார்கள். எனவே, தொண்டர்கள் குறித்து கவலைப்படாமல், இரு அணிகளும் இணைய தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறார்கள். இதை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது, தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க இரு அணிகளையும் ஜெயலலிதா ஒன்றாக்கினார். அதில் சுயநலம் எதுவுமில்லை. மாறாக, தொண்டர்களின் விருப்பம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக எதுவும் நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கமாகும். சசிகலா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கதியில் அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனையைப் பெற்று சட்டப்படியாக இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
நீதி விசாரணையை வரவேற்கிறேன்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். நீதி விசாரணை, சசிகலா மீதுள்ள அவப்பெயர் நீங்குவதற்கு உதவியாக இருக்கும். சசிகலா தூய்மையானவர் என்பதை நிரூபிக்கவே ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். எனவே, சசிகலா குற்றமற்றவர் என்பது நீதி விசாரணையில் தெரியவரும் என்றார்.
பேட்டியின் போது, கர்நாடக அதிமுக (அம்மா அணி) செயலாளர் வா.புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com