அணிகள் இணைவது குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்: கடம்பூர் ராஜூ
இரு அணிகள் இணைவது குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


திருவாரூர்: இரு அணிகள் இணைவது குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
''அதிமுக அணிகள் இணைப்புக் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து 6 மணி நேரம் கருத்துக் கேட்பு நடத்தினார்; இதன் மூலம் ஜனநாயக நடைமுறையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இணைப்புக் குறித்த அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வமே விரைவில் வெளியிடுவார்'' என்று ஓபிஎஸ் அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பது ஆகிய ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியக் கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே அதிமுகவின் இரு அணிகளும் பரபரப்பாகக் காணப்பட்டன.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். அப்படி அமைத்தால்தான் இணைப்பு பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பமான நிலையில் இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பினர். கூட்டம் முடிந்து மதுசூதனன் செல்லும்போது, ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார்.
இரு அணிகள் இணைப்புத் தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஆலோசனைக்குப் பிறகு இணைப்பு தொடர்பாக இன்று சனிக்கிழமை (ஆக.19) முடிவு தெரிவிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வந்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓபிஎஸ் அணியின் 2 கோரிக்கைள் ஏற்கப்பட்டுள்ளன. அதிமுக அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...