ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை மத்தியக் குழு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
கடந்த நவ. 30ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியதில் இம்மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. வாழை, ரப்பர் மரங்களும், ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல்வேறு நிகழ்வுகளால் 20 பேர் வரை இறந்தனர்.
கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஏராளமானோர் இன்னும் கரைதிரும்பவில்லை. இம்மாவட்ட மீனவர்கள் 8 பேர் உயிரிழந்ததை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இம்மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, இம்மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மத்தியக் குழு நேரடி ஆய்வு செய்யும் என பிரதமர் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, இம்மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் தலைமையில் புதுதில்லி கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வள ஆணையர் பி. பால்பாண்டியன், மத்திய மின்துறை துணை இயக்குநர் ஒ.பி. சுமன், மத்திய கப்பல்துறை அலுவலர் பரமேஷ்வர் பாலி, மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குநர் கே. மனோகரன் ஆகியோரைக் கொண்ட மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை குமரி மாவட்டம் வந்தனர்.
இவர்கள் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்தியகோபால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் மு. சாய்குமார், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கே. கோபால், வேளாண் துறை முதன்மைச் செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மீன்வளத் துறை இயக்குநர் வி.பி. தண்டபாணி, ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் தூத்தூர் புனித யூதா கல்லூரிக் கூட்டரங்கில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீனவப் பிரதிநிநிகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். மீனவப் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, வள்ளவிளையில் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புப் பகுதிகளையும், மருந்துக்கோட்டை, சுருளோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்கள், மின் சேதங்கள், சாலைகளையும் ஆய்வு செய்தனர்.
இக்குழுவினர் வெள்ளிக்கிழமையும் (டிச. 29) மாவட்டம் முழுவதும் ஆய்வுப் பணி மேற்கொள்ளவுள்ளனர்.
முன்னதாக, கொல்லங்கோட்டில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே. சத்தியகோபால் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ரூ. 133 கோடியை புதன்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து மத்தியக் குழு இம்மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ளது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு மேலும் அதிக நிவாரணம் கிடைக்கக்கூடும்.
ஒக்கி புயலால் தமிழகத்தில் 220 பேர் மாயமாகியுள்ளனர். இதில் 170 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒக்கி புயலின்போது, 13 வள்ளங்களில் சென்ற 35 மீனவர்கள் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. புயலால் உயிரிழந்த மீனவர்கள், விவசாயிகளுக்கு ரூ. 84 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
ரப்பர், வாழை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். பேரிடர் காலங்களிலேயே இதன் முக்கியத்துவம் தெரியவரும்.
குடும்பத் தலைவரை இழந்த குழந்தைகளின் கல்வி தொடர முக்கியத்துவம் கொடுப்போம். ஜன. 3ஆம் தேதி எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் விவரங்களை தமிழக அரசுக்கு கொடுத்து, புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.