108 ஆம்புலன்ஸ் சேவை யாருடைய திட்டம்?: திமுக - அதிமுக விவாதம்
ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக திமுக - அதிமுக இடையே சட்டப்பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.


ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் யாருடைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக திமுக - அதிமுக இடையே சட்டப்பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.
சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசும்போது, 108 ஆம்புலன்ஸ் சேவையை கருணாநிதி கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: ஆம்புலன்ஸ் சேவை 2005- இல் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 1056 என்ற எண்ணை அழைத்தால் ஆம்புலன்ஸ் வரும் வசதி 29 மாவட்டங்களில் இருந்தது. இதைத்தான் பிறகு திமுக ஆட்சியில் மத்திய அரசு நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரே எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டபோது, 108- ஆக மாற்றி அறிவித்தது. அதனால், அதிமுக ஆட்சியில்தான் ஆம்புலன்ஸ் சேவை கொண்டு வரப் பட்டது. இது தொடர்பாக திமுக உறுப்பினருடன் ஆதாரத்துடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன் என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பூங்கோதை: 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் கருணாநிதியின் எண்ணத்தில் உதித்த திட்டமாகும். இதை யாரும் மறுக்க முடியாது.
அமைச்சர் விஜயபாஸ்கர்: ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டு நிறுவனங்கள் மூலம் இதனைச் செயல்படுத்தி வந்தோம். அதையே திமுக மாற்றி அறிவித்தது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்(திமுக): 108 ஆம்புலன்ஸ் சேவை திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.
அமைச்சராக நான் இருந்தபோது கருணாநிதி என்னை ஹைதராபாதுக்கு அனுப்பி வைத்து ஆம்புலன்ஸ் சேவை எப்படி இயங்குகிறது எனப் பார்த்து வரச் சொன்னார்.
அதன்படி, அதிகாரிகளுடன் சென்று பார்த்து வந்தேன். அதன் பிறகு ஆம்புலன்ஸ் சேவையைக் கொண்டு வந்தோம்.
விஜயபாஸ்கர்: 100 சதவீதம் அதிமுகவின் திட்டம் இது. 187 ஆம்புலன்ஸ்கள் அதிமுக ஆட்சியில் இயங்கின.
பூங்கோதை: சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என அமைச்சர் நினைக்கிறார் என்றார்.
அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் மாசிலாமணி பேசும்போதும் இதே விவகாரம் தொடர்பாக திமுக - அதிமுக இடையே விவாதம் நடைபெற்றது.
மாசிலாமணி: 108 ஆம்புலன்ஸ் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. 24 மணி நேரமும் தமிழகம் முழுவதையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில் நாங்கள்தான் கொண்டு வந்தோம்.
விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சியிலும் 24 மணிநேரமும் அனைத்து வசதிகளுடன் தமிழகம் முழுவதையும் ஒருங்கிணைத்துதான் செயல்பட்டது.
1056 என்ற எண்ணை அழைத்தால் ஆம்புலன்ஸ் செல்லும் வசதி இருந்தது.
மாசிலாமணி: உங்கள் ஆட்சியில் 1056 என்ற ஆம்புலன்ஸ் சேவை இருந்தது என்கிறீர்கள். அது தற்போது இல்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைதான் நிலைத்து இருக்கிறது என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...