டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மனுதாரர் பி.ஏ. ஜோசப் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன் ஆஜராகி முன்வைத்த வாதம்:
'டிடிவி.தினகரனுக்கு, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு குற்ற வழக்கில் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டாலே அவரும் குற்றவாளிதான். எனவே, அபராதம் விதிக்கப்பட்ட நபர்களையும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். குற்ற வழக்குகள் மட்டுமல்லாமல், சுங்கச் சட்டம், ஃபெரா சட்டம் ஆகியவற்றின் மூலம் துறை சார்ந்த நடவடிக்கைகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வேட்பு மனுக்களையும் பெறக் கூடாது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு நீதிபதிகள், 'ஒரு குற்றத்துக்காக, நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட எந்தவிதத் தடையுமில்லை; ஆனால், நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com