தலைமைச் செயலகத்தில் திரண்ட காவலர்களின் குடும்பத்தினர் கைது? பதற்றம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுக்க, தலைமைச் செயலகத்தில் திரண்ட பல்வேறு மாவட்ட காவலர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுக்க, தலைமைச் செயலகத்தில் திரண்ட பல்வேறு மாவட்ட காவலர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வரிடம் அளிக்க தலைமைச் செயலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க சட்டப்பேரவைக்கு வந்த காவலர்களின் குடும்பத்தினரை கலைந்து செல்ல காவல்துறையினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக காவல்துறையினரின் குடும்பத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை சட்டப்பேரவையில் நடப்பதால், முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறையினர் கூறினர். முதல்வரின் தனிப்பிரிவில் மனுவை வழங்க அனுமதிக்குமாறு காவல்துறையினரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதற்கும் காவல்துறை மறுத்தனர். காவலர்களின் குடும்பத்தினர் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கத்தினரும் தலைமைச் செயலகத்தில் குவிந்ததால் பதற்றம் அதிகரித்தது. காவலர்களுக்கு உரிய பதவி உயர்வை வழங்கிடவும், காவலர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், போதிய காவலர்களை பணியமர்த்தவும் வலியுறுத்தி கோரிக்கை அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால், அவர்களை வாகனங்களில் ஏற்று காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, காவல்துறை மானியக் கோரிக்கை சட்டப்பேரவையில் கொண்டுவரும் போது, காவல்துறையினரின் குடும்பத்தினர் சட்டப்பேரவையை முற்றுகையிட திட்டமிட்டிருப்பதாக சமூக தளங்களில் செய்தி பரவியது. இது குறித்து சென்னையின் பல இடங்களில் போஸ்டர்களும் அச்சிடப்பட்டன. இதையடுத்து, சென்னையில் தலைமைச் செயலகம் உட்பட பல முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...