/

தாது மணல்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

தாது மணல் எடுப்பது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

DIN

தாது மணல் எடுப்பது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தாது மணல் எடுப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை
(ஜூலை 13) கேள்வி எழுப்பினார். கேள்வி நேரத்துக்குப் பிறகு அவர் எழுப்பிய இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து நடந்த விவாதம்:}
தாது மணல் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவானது கடந்த 2013}ஆம் ஆண்டு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.
இந்த அறிக்கை மீது கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும் குவாரிகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். குவாரிகளில் விஷயத்தில் தவறு செய்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்: தமிழக அரசின் சிறப்புக் குழுவானது தாது மணல் எடுப்பது தொடர்பாக வழங்கிய அறிக்கையைத் தொடர்ந்து, கடந்த 2013}ஆம் ஆண்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அவற்றை எடுப்பதற்கு தடை செய்யப்பட்டு நடைச் சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடியின் ஆய்வறிக்கை பெறப்பட்டு அதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் செப்டம்பர் 4}ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாதுமணல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசகராக வி.சுரேஷ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தாது மணல் தொடர்பான பொது நல வழக்கின் விசாரணையின் போது அரசு செயலாளர் சத்யபிரதா சாகு தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்தக் குழுவின் ஆய்வு இப்போது நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுப்படி தாதுமணல் வெட்டியெடுப்பது முற்றிலும் தடுக்கும் நோக்கில் அரசுத் துறை அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு பறக்கும் படை அமைக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆலோசகர் வி.சுரேஷ், தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.