/

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு

சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ.55 ஆயிரத்திலிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:28 pm

DIN

சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ.55 ஆயிரத்திலிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாதாந்திர ஊதியம் ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாகவும் அவர்களின் இதர படிகளும் உயர்த்தி வழங்கப்படும். ஈட்டுப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும், தொலைபேசி படி மாதம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 7500-ஆகவும், தொகுதிப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும், தொகுப்புப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.2,500-இலிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், வாகனப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ. 25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அஞ்சல்படி ரூ. 2,500-ஆகத் தொடர்ந்து வழங்கப்படும்.
இதன் முலம், தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து ரூ.55 ஆயிரம் என்பது மேலும் ரூ.50 ஆயிரம் உயர்ந்து, ஒரு லட்சத்து 5 ஆயிரம் மாதந்தோறும் பெறுவர்.
முதல்வரின் ஈட்டுப்படி: முதல்வர், அமைச்சர்கள், பேரவைத் தலைவர் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி ரூ.15 ஆயிரமாகவும், சில்லறைச் செலவினப்படி ரூ.10 ஆயிரமாகவும், தொகுதிப்படி 25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று, பேரவைத் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி ரூ.15 ஆயிரமாகவும், சில்லறைச் செலவினப்படி ரூ.7,500-ஆகவும், தொகுதிப்படி ரூ. 25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியம்: ஓய்வு பெற்ற சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியமும், எம்.எல்.ஏ.க்கள் பெறும் ஓய்வூதியத்தின் 50 சதவீதம் எனும் அடிப்படையில் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறும் முன்னாள் சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்களின் வயதினைக் கருத்தில் கொண்டு, மருத்துவச் சிகிச்சைகளுக்கென வழங்கப்படும் தொகை ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மற்றும் இதர படிகள் 2017 ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
பேரவைக் காவலர்களின் தினப்படி அதிகரிப்பு: பேரவைக் காவலர்களுக்கு வழங்கப்படும் தினப்படியை உயர்த்தி வழங்குமாறும் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தலைமைக் காவலர் மற்றும் காவலருக்கு வழங்கப்படும் தினப்படியானது ரூ.50-இலிருந்து ரூ.100-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
துணை ஆய்வாளர் நிலையில் உள்ளவர்களுக்கு தற்போது வழங்கப்படும் தினப்படி ரூ.55-இலிருந்து ரூ.110-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு: ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதும் அதிமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசும்போது, திமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை ரத்து செய்தது அதிமுக அரசு என்று கூறினார்.
அதற்குப் பேரவைத் தலைவர் தனபால், உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களின் மகிழ்ச்சியுடன் என்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடு உள்ளது. அதன்படி ஜெ.அன்பழகன் பேசுகிறார். இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.