எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அணைகளுக்கு நீர்வரத்து இல்லை: சேர்வலாறு அணை நீர்மட்டம் மீண்டும் சரிவு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. மொத்தமுள்ள 11 அணைகளின் நீர்வரத்து 22 கனஅடியாக உள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2017, 5:31 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. மொத்தமுள்ள 11 அணைகளின் நீர்வரத்து 22 கனஅடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர் இருப்பு  புதன்கிழமை 16.40 அடியாக குறைந்தது.

வடகிழக்குப் பருவம், தென்மேற்கு பருவம் ஆகிய இரு பருவ காலங்களில் பெய்து வரும் மழையினால் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து கிடைக்கும் நீரை சேமித்து வைக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட 11 அணைகள் அமைந்துள்ளன.

இந்த அணைகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணிப் பாசனத்தில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் வசதி பெற்று வருகின்றன. இது தவிர குடிநீர், கால்நடை மற்றும் தொழிற்சாலை தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன.

தென்மேற்கு பருவத்தை விட வடகிழக்குப் பருவத்தில் வளமையான மழை அளவை விட கூடுதலாக பெய்து வருவதால் இப்பருவத்தில் இங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டுகிறது. அணைகள் நிரம்பிய நிலையில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் தாமிரவருணி நதியில் சராசரியாக 13 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் வீணாக செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக 814.80 மி.மீ மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்புவதில்லை. 2015 இல் வளமையான மழை அளவை விட கூடுதலாக 95 சதவீதம் மழை பெய்ததால் 11 அணைகளும் நிரம்பி, உபரி நீர் சுமார் 15 டி.எம்.சி. வீணாக கடலுக்கு சென்றது.

2016 இல் இவ் விரு பருவத்தில் போதிய மழை பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் இருப்பு எதிர்பார்த்தவாறு உயரவில்லை. 
இந்த சூழலில் தாமிரவருணி பாசனத்தில் கடந்த ஆண்டு பிசான சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழல் உருவானது. பயிர் செய்த நெல், வாழைப் பயிர்களும் நீரின்றி கருகி சேதமடைந்தன.

நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதத்தில் தொடங்கினாலும் தொடர்ந்து பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து பெரிய அளவில் இல்லை. அணைகளின் நீர் இருப்பைக் கொண்டு இரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த காலங்களில் ஜூலை மாத இறுதியில் மழை பெய்து அணைகளின் நீர்இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. தாமதமாக கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு மழை பெய்ய வேண்டிய தருணத்தில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் நிலவி வருவதால் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை காணப்படுகிறது. புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1.85 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 2 கனஅடி, கடனாநதி அணைக்கு 8 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைக்கு தலா 2 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 5 கனஅடி என மொத்தத்தில் 22 கனஅடி மட்டுமே நீர்வரத்து இருந்தது.

அணைகளின் நீர்இருப்பு மிக குறைவாக இருப்பதால் நிகழாண்டு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கு சாத்தியமில்லை என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அணைகளின் தற்போதையை நீர் இருப்பை கொண்டு குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மீண்டும் சரிவு: 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர் இருப்பு புதன்கிழமை நிலவரப்படி 16.40 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாததாலும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அணையில் நீர் இருப்பு வைக்க முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 53 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 33.67 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 55.40 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 65 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 32.42 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 80 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 6.35 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 9.50 அடியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து 354.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.