நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்காவிட்டால், அதன் விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.கே.சேகர்பாபு தலைமையில்: சென்னை பாரிமுனையில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் க.அன்பழகன் பேசியது: நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். இதனால் கொள்கை அளவில் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். அப்படிக் கைவிடாவிட்டால், எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
சு.திருநாவுக்கரசர்: நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கத் தயங்குகிறது. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக நலன் பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும்.
இரா.முத்தரசன்: நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீட் தேர்வில் விலக்கு அளிக்காவிட்டால், தமிழகத்தில் போராட்டம் தீவிரமடையும்.
ஜெ.அன்பழகன் தலைமையில்: சென்னை அண்ணாசாலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தேனாம்பேட்டையில் அறிவாலயம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம், முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மா.சுப்பிரமணியன் தலைமையில்: சைதாப்பேட்டை சின்னமலை அருகில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திமுகவின் சட்டத்துறை செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பல்லாவரம் கண்டோன்மென்ட் பேருந்து நிலையம் அருகில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் ரயில்நிலையம் அருகில் அம்மாவட்ட திமுக செயலாளர் பொன்முடி தலைமையிலும், திருவண்ணாமலையில் அம்மாவட்ட திமுக தலைவர் எ.வ.வேலு தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
நல்லகண்ணு, திருமாவளவன் பங்கேற்பு: மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையிலும், கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
நாராயணசாமி பங்கேற்பு: புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுவை மாநில திமுக அமைப்பாளர் சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள் பங்கேற்பு: சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்ட தலைநகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினரைத் தவிர்த்து, மாணவர்கள், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.