/

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்!

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தமிழக எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தமிழக எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். அதன் விவரம் வருமாறு:
பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்படுமா?
மக்களவையில் விதி எண் 377-இன் கீழ், மயிலாடுதுறை தொகுதி அதிமுக உறுப்பினர் கே.பாரதிமோகன் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை:
மயிலாடுதுறை தொகுதிக்குள்பட்ட கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் இரு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கிணறுகளில் இருந்து மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுக்கப்படுவதாக கிராமத்தைச் சேர்ந்த சில விஷமிகள் துஷ்பிரசாரம் செய்தனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என அஞ்சிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களைச் சமாதானப்படுத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் முயன்றும் எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. இதனால், போராட்டம் நீடித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் மீத்தேன், ஷேல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கிராம மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
நெடுவாசல் திட்டம் கைவிடப்படுமா?
மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் திங்கள்கிழமை பேசியது:
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் வாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு நிகழாண்டின் பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தக் கிராமத்தை சேர்ந்த 100 நாள்களுக்கும் மேலாக இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராடி வருகின்றனர். இந்தக் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது விவசாயப் பொருளாதாரத்தை பாதிக்கும். நீர்வளம், நிலவளம் மிகுந்த பகுதியாக நெடுவாசல் உள்ளது. இப்பகுதி நிலங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. அது மீட்கப்படவில்லை. நெடிய புகார்களுக்குப் பிறகு இழப்பீடு குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை உடனே நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கச்சத்தீவு மீட்கப்படுமா?
மாநிலங்களவையில் அதிமுகஉறுப்பினர் எம்.முத்துக்கருப்பன் திங்கள்கிழமை பேசியது: கடந்த 27-ஆம் தேதி, ராமேசுவரத்தில் நடைபெற்ற குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக மீனவர்களின் விவகாரத்தை வலியுறுத்தினார். அன்றைய தினமே இலங்கை அரசு தமிழக மீனவர்கள் 75 பேரையும், 42 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்ததாக செய்திகள் வெளியாகின. இதற்காக பிரதமருக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியிருந்தார். தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத் தீவு திரும்பப் பெறப்பட வேண்டும். பாக் நீரிணையில் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உரித்தானது. இலங்கையின் பிடியில் உள்ள எஞ்சிய மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.