/

டி.டி.வி. தினகரனைச் சந்தித்த ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

டி.டி.வி. தினகரனை அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:41 pm

DIN

டி.டி.வி. தினகரனை அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
தினகரனைச் சந்தித்த அதே வேளையில் தலைமைச் செயலகத்தில் பிற்பகலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் இல்லம் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே பரபரப்பாக காணப்பட்டது. முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களாகவும் உள்ள தோப்பு என்.டி.வெங்கடாசலம், வி.செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் தினகரனை சந்தித்துப் பேசினர்.
அவர்களைப் போன்றே, எம்.எல்.ஏ.க்கள் பி.வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன், ராஜன் செல்லப்பா, பரமக்குடி முத்தையா, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி என 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தினகரனைச் சந்தித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் தினகரனைச் சந்தித்த போதும், அவர்களில் சிலர் முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ., வெற்றிவேல் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு எந்த வகையிலும் நெருக்கடி தரமாட்டோம். தொகுதிப் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தினோம் என்றார்.
தன்னைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்களிடம் டிடிவி தினகரன் கூறியதாக அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூறியது:
அதிமுக அம்மா அணியின் ஆட்சி நம்மால் எந்தவகையிலும் கலைந்து விடக் கூடாது. அந்தக் கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது. எனவே, ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்கிற வகையில் எந்த நெருக்கடியையும் எம்.எல்.ஏ.,க்கள் தரக்கூடாது.
அதேசமயம், நமது கோரிக்கைகளுக்கு உரிய அழுத்தங்களை ஆட்சித் தலைமையிடம் முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து அழுத்தம் தருவோம். இரண்டு மாதங்கள் வரை பொறுத்திருப்போம். அதற்குப் பிறகு உரிய முடிவுகளை எடுக்கலாம் என்று தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறினர்.
இரு இடங்களிலும் சந்திப்பு: அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த அதே நேரத்தில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினர்.
தங்களிடமும் தொகுதி மக்களின் கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாக அவர்கள் கூறினர். இதனால், ஆட்சிக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
எதிர்முகாம் எம்.எல்.ஏ.க்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு எதிராக இருக்கும் எம்.எல்.ஏ.,க்களே தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதாக அதிமுக அம்மா அணியில் கருத்து எழுந்துள்ளது. மேலும், ஓ.பி.எஸ்., அணிக்கு செல்ல முடியாத அதேசமயம் அதிருப்தியில் இருக்கக் கூடிய எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தினகரனைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு அதனை தக்க சமயத்தில் பயன்படுத்தவும் தினகரன் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதற்காகவே வீடு தேடி வந்து சந்திக்கும் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் யாரையும் தினகரன் தடுக்கவில்லை. இந்த ஆதரவை தனக்குத் தேவைப்படும்போது பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தவும் அவர் முடிவு செய்திருப்பதாக அதிமுக அம்மா அணியினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.