எடப்பாடி அரசுக்கு ஆதரவளிக்க ரூ.10 கோடி கேட்டேனா?: தமிமுன் அன்சாரி மறுப்பு

'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் எம்எல்ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா 
எடப்பாடி அரசுக்கு ஆதரவளிக்க ரூ.10 கோடி கேட்டேனா?: தமிமுன் அன்சாரி மறுப்பு
Published on
Updated on
1 min read

சென்னை: 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் எம்எல்ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா  செய்யப்பட்டதாகவும், அதில், எனக்கும் 10 கோடி கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன், மறுக்கிறேன் என்று மனித நேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நோன்பு துறந்து விட்டு வீட்டில் அமர்ந்திருந்த எனக்கு இச்செய்தி வந்ததும் மிகுந்த வேதனையடைந்தேன். அதிமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியும் இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது.

நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும். மேலும், எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது 'கரண்ஸி பாலிடிக்ஸ்' எங்களுக்கு பிடிக்காது என்பதையும் கூறினோம். அவரும் எங்களைப்பற்றி முழுமையாக தெரிந்தவர் என்பதால் சிரித்துக் கொண்டே அதை ஆமோதித்தார்.

எங்களிடம் நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார். உங்களின் தொகுதி மற்றும் சமுதாய கோரிக்கைகளையும் தாருங்கள் என்றார் நாங்களும் கொடுத்தோம். உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம்.

அப்போது, மஜக தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர். அப்போது இதைத்தவிர நாங்கள் எதுவும் பேசவில்லை. எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை. இது இறைவன் மீது ஆணையாகும். இது அதிமுக தலைவர்களும் அறிந்த உண்மையாகும்.

இப்படியிருக்க சமீப காலமாகவே எங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இடையில் சில முரண்பாடுகள் நிலவி வருகிறது. அதிமுக அரசுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிகளை நாங்கள் உரத்த குரலில் கண்டித்து வருகிறோம்.

இந்நிலையில், 'டைம்ஸ் நவ்' வழக்கமான விளம்பர பரபரப்புக்காக ஊடக அறத்தை மீறி செயல்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

இதற்கு 'பின்னணி' என்ன என்பது தில்லியை கவனிப்பவர்களுக்கு புரியும். சரவணன் குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். இது தொடர்பாக மஜக சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நான் உடல் நலம் குன்றி , இப்போது தான் தேறி வந்த நிலையில் இந்த அபாண்ட குற்றச்சாட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் அரசியலுக்கு வந்தோம்? நமக்கு இதுவெல்லாம் தேவையா? என்பது போன்ற மனநிலை உருவாகியிருக்கிறது.

தமிழக ஊடக நண்பர்களும், சமூக இணையதள செயல்பாட்டாளர்களும் தயவு செய்து இவ்விவகாரத்தில் உண்மையாகவும், விசாரித்தும் கருத்துக்களை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com