/

திமுகவினரின் எதிர்ப்புப் பேச்சு: அமைச்சருக்கு உதவிய ஓபிஎஸ்

உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசும்போது, அமைச்சர் காமராஜுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை உதவினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:46 pm

DIN

உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசும்போது, அமைச்சர் காமராஜுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை உதவினார்.
உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசியது: நியாயவிலைக் கடைகளில் பருப்புகள் இல்லாத சூழல் இருந்தது. திமுக போராட்டம் நடத்திய பிறகே பருப்புகள் வாங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. பருப்புகள் வாங்க தாமதம் ஆனதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என அமைச்சர் காமராஜ் கூறியதாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினும், பருப்புகள் வாங்காததற்கு ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போடாததுதான் காரணம் என அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டதாகக் கூறினார்.
அதற்கு அமைச்சர் காமராஜ், அப்படி எதுவும் நான் அறிக்கை விடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலைத் தருகிறார் என்றார்.
அதன் பிறகு, அறிக்கை வெளியிடவில்லை. தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் காமராஜர் கூறியதாக, எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறியது:
முதல்வராக இருந்த காலங்களில் 3 நாளுக்கு மேல் எந்தக் கோப்பும் நான் கையெழுத்திடாமல் தேங்கி இருந்தது இல்லை என்றார்.
பின்னர், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் 50 சதவீத அளவிலேயே பொருள்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், அமைச்சர் எல்லாப் பொருள்களும் 100 சதவீதம் இருப்பதாக கூறுகிறார் என்றார் எ.வ.வேலு.
பேரவையில் ஓரணியாக அதிமுக: அப்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் காமராஜிடம் திமுக உறுப்பினர் பேசியதற்கு ஆதாரம் கேட்குமாறு கூறினார். காமராஜும் எழுந்து, திமுக உறுப்பினர் பேசுவதற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால், அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் சொல்லிக் கொடுத்ததை அமைச்சர் காமராஜ் குறிப்பிடுவதாக திமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டாலும், பேரவையில் ஓரணியாக அதிமுக செயல்படுவதைப் பார்க்க முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.