டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எண்ணூர் துறைமுகம் தனியார்மயம்?

தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணூர் காமராஜர் துறைமுகம் தனியாருக்கு முழுமையாக விற்பனை செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவைச்

News image
Updated On :29 ஜூன் 2017, 10:16 pm

முகவை க.சிவக்குமார்

தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணூர் காமராஜர் துறைமுகம் தனியாருக்கு முழுமையாக விற்பனை செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவைச் செயலாளர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இத்துறைமுகத்தை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது உறுதியாகியுள்ளது.
துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்ணனி: சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்பட்டு வந்ததால் சுற்றுச் சூழல் பாதிப்பு பிரச்னை ஏற்பட்டது. ஆனால் தமிழக மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி தட்டுப்பாடின்றி தொடர்ந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருந்து வந்ததால் நிலக்கரியைக் கையாள சென்னைக்கு அருகே எண்ணூரில் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு அன்றைய வாஜ்பாய் அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்தத் துறைமுகத்தை கட்டமைக்க சென்னைத் துறைமுகம் ரூ.100 கோடியும், மத்திய அரசு ரூ.200 கோடியும் செலவிட்டது. இதெற்கென சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டது. பிறகு உப்பு வாரியத்தின் சுமார் 800 ஏக்கர் நிலமும் துறைமுகம் சார்பில் விலைக்கு வாங்கப்பட்டது. இத்துறைமுகத்தின் மொத்த நிலப்பரப்பு 2770 ஏக்கர் ஆகும். பிப்.2001-ம் ஆண்டு துறைமுகம் திறக்கப்பட்டு அந்த ஆண்டு ஜூன் மாதமே செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
முன்மாதிரி துறைமுகம்: இந்தியாவில் ஏற்கனவே இருந்து வந்த 11 பெருந்துறைமுகங்களும் அறங்காவலர் குழு மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் எண்ணூர் துறைமுகம்தான் நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. மேலும் முற்றிலுமாக தனியார் முதலீட்டின் அடிப்படையில்தான் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தமிழக அரசுக்கான நிலக்கரி முனையங்கள்-2, எரிவாயு முனையம்-1, பல்சரக்கு கையாளும் முனையங்கள்-1, தனியார் நிலக்கரி கையாளும் முனையம்-1, இரும்புத் தாது முனையம்-1 என ஏற்கெனவே 6 முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 1.45 மில்லியன் பெட்டகங்களைக் கையாளும் முனையம், பல்சரக்கு முனையம் என மேலும் இரண்டு முனையங்களை கடந்த ஜூன் 9 -ம் தேதி அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
செயல்திறனில் முன்னிலை: சுமார் ரூ.300 கோடி நேரடி முதலீட்டில் தொடங்கப்பட்ட துறைமுகத்தின் தற்போதைய தோராய மதிப்பு ரூ. 29 ஆயிரம் கோடி (நிலங்கள், முதலீடு, திறன் மதிப்பு உள்ளிட்டவை உட்பட) என கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசுக்கு லாபப் பங்கு ஈவுத் தொகையாக மட்டும் ரூ.320 கோடி துறைமுகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் ரூ. 700 கோடிவரை அனைத்து வகை வரிகள், கட்டணங்களாக மத்திய அரசுக்கு இத்துறைமுகம் செலுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 12 மில்லியன் டன் சரக்குகள் கையாண்ட நிலையில் கடந்த ஆண்டு 30 மில்லியன் சரக்குகளைக் கையாண்டு இத்துறைமுகம் சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டில் புதிதாக சரக்குப் பெட்டக முனையம், பல்சரக்கு முனையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 மில்லியன் சரக்குகளைக் கையாள முடியும். இதே வளர்ச்சி தொடர்ந்தால் சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 145 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை காமராஜர் துறைமுகம் பெறும் என்கிறார் இத்துறைமுகத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்து வரும் துறைமுக நிர்வாகி ஒருவர்.
ஒட்டுமொத்தமாக விற்கும் முடிவில் மத்திய அரசு: காமராஜர் துறைமுகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இத்துறைமுகம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட உள்ளதாகச் செய்தி வெளியாகியது. இதனால் துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமின்றி துறைமுக உபயோகிப்பாளர்கள், முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், தொழிற்சங்க அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எண்ணூர் துறைமுகத்திற்கு அமைச்சர் கட்கரி வரவிருந்த நிலையில் வெளியான இச்செய்தி முதலில் வதந்தி என்ற நம்பப்பட்டது. ஆனால் இத்திட்டத்திற்கு கப்பல்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இத்துறையின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் காமராஜர் துறைமுக விற்பனைக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் எதிர்ப்புகளை மீறி துறைமுகத்தை விற்பனை செய்யும் முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசு: இத்துறைமுகத்தைக் கட்டமைத்ததில் மத்திய அரசை விட தமிழக அரசுக்குப் பெரும் பங்கு உள்ளது. காரணம் ஒட்டுமொத்த நில ஆர்ஜிதமும், இணைப்புச் சாலைகள் திட்டமும் தமிழக அரசுதான் செய்து தந்துள்ளது. மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி எதிர்ப்புகளைச் சமாளித்து திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதில் தமிழக அரசுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே இத்துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
எண்ணூர் காமராஜர் துறைமூகம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்
எண்ணூர் துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து, கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இதுபோன்று பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் அரசின் ஆய்வில் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், இந்தப் பிரச்னையை முன்னிறுத்தி வேலை நிறுத்தம், போராட்டங்களை நடத்துவது தேவையற்றது.
தமிழகத்தில் உள்ள பெரும் துறைமுகங்களான சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் காமராஜர் ஆகிய மூன்று துறைமுகங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம்.
தனியாருக்கு விற்பனை செய்வது என இறுதி முடிவு எடுக்கப்பட்டால் அப்போது தமிழக மக்கள் சார்பில் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.