/

மதுரையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்க விழா

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தொடக்க விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:19 pm

DIN

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தொடக்க விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார்.
நூற்றாண்டு விழாவுக்கு மதுரை - சிவகங்கை சாலை சந்திப்பு அருகே சுற்றுச்சாலையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். விழா மேடையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், பொதுப்பணித் துறை விருந்தினர் இல்லம் செல்லும் வழியில் கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். 54 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நன்றி கூறுகிறார்.
முதல்வர் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சுற்றுச்சாலை பகுதியில் விழா நடைபெறுவதால், அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.