மதுரவாயல் உயர் மேம்பாலத் திட்டம் மீண்டும் தொடங்குவது சாத்தியமா?
சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் உயர் மேம்பாலத் திட்டத்தை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் இணக்கமாகச் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டத்தை மீண்டும்


சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் உயர் மேம்பாலத் திட்டத்தை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் இணக்கமாகச் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன.
சென்னைத் துறைமுகத்திற்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால் மாநகரப் போக்குவரத்தில் ஏற்பட்ட நெரிசலைத் தீர்க்க, இந்த சிறப்புத் திட்டம் 2009 -இல் கொண்டு வரப்பட்டது.
இந்தத் திட்டம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, மாநில அரசு இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க உள்ளது என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், தில்லி சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். இதில் மதுரவாயல் மேம்பாலத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் திட்டச் செலவுகள்
2009-ஆம் ஆண்டு விலைப் புள்ளிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 10 சதவீதம் விலைப்புள்ளியை உயர்த்தி அளிக்க வேண்டும். இதன்படி பார்த்தால் சுமார் 7 ஆண்டுகளுக்கு தோராயமாகக் கணக்குப் பார்த்தால்கூட தற்போதைய திட்ட மதிப்பீடு ரூ.1,815 கோடியிலிருந்து சுமார் ரூ.3,100 கோடியாக உயரும் நிலை உள்ளது.
இதற்கிடையே சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனம் கேட்டுள்ள இழப்பீட்டுத் தொகை ரூ.1,200 கோடியை யார் செலுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் பிறகு இத்திட்டத்தின் பங்குதாரர்களாக உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னைத் துறைமுகம், தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில் சென்னைத் துறைமுகம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் மீண்டும் இதற்கான நிதிக்கு எங்கே போகும்? என்ற கேள்வியும் எழுகிறது. இதன்பிறகுதான் புதிய ஒப்பந்தப் புள்ளியையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிக்கும். பின்னர் தனியார் பங்களிப்பை அளிக்க கட்டுமான நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்
திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்த சோமா எண்டர்பிரைசஸ், தடைக்குப் பிறகு சில ஆண்டுகள் தூண்களை துருப்பிடிக்காமல் பராமரித்து வந்தது. ஆனால் தடை தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் நீடித்ததால் கட்டுமான தடவாளங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்ற இந்நிறுவனம் முதலில் ரூ.700 கோடியும், பிறகு சுமார் ரூ.1,200 கோடியும் இழப்பீடு வழங்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகளும் தற்போது நிலுவையில்தான் உள்ளன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் 16, 2016-ல் இத்திட்டத்தையே ரத்து செய்தது. மேலும் தடைகள் நீங்கிய பிறகு இத்திட்டத்தைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கப்பட்டு புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் எனவும் தெரிவித்தது.
தொடர் முயற்சிகளால் மட்டுமே சாத்தியம்
எனவே மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும் உடனடியாக இத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதே தற்போதைய நிலை. ஆனால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம், மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் உன்னத திட்டம் என்ற நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் எங்கும் இல்லாத சுமார் 19 கி.மீ. மதுரவாயல் உயர் மேம்பாலம் சென்னையில் அமையும்; தமிழக மக்களின் கனவுத் திட்டம் நிறைவேறும் என்பதே யதார்த்த நிலையாக உள்ளது.
துருப்பிடித்த தூண்கள்
இந்நிலையில் இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தொழில்நுட்பம், நிர்வாக அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள், தடைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்கள் முழுமையாக கட்டப்படவில்லை. கால்வாசி, முக்கால்வாசி என அமைக்கப்பட்ட இத்தூண்களின் கம்பிகள் தற்போது துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன. கூவம் நதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தூண்களில் செடிகள் படர்ந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
இதே துருப்பிடித்த கம்பிகளைக் கொண்டு பாலத்தைத் தாங்கும் உறுதியான தூண்களை மீண்டும் அமைக்க முடியுமா, இல்லையெனில் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தூண்களை பெயர்த்தெடுக்கும் சாத்தியம் உள்ளதா என்பதெல்லாம் தொழில்நுட்ப அடிப்டையில் கேள்விக்குறிதான் என கட்டுமானப் பொறியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...