தபால்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதால் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. தபால் ஊழியர்களே குழுக்களாக, மார்க்கெட் பகுதி, மாநகராட்சி அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, தொழில் நிறுவனங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரடியாகவே சென்று, விண்ணப்பங்களை விநியோகித்து வருகின்றனர். இதனால் மக்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவது எளிதாகிறது. மக்கள் பயன்பாடு அதிகரிக்கும்பட்சத்தில் விரைவில் மதுரைக் கோட்டத்தில் கூடுதல் தபால் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும்.விரைவில் அனைத்து தபால் ஊழியர்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் வழங்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் நம் வீட்டில் இருந்தபடியே சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, போன்ற வசதிகளும் வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தும்போது, சேமிப்பு கணக்கோடு சேர்த்து பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற விபத்து காப்பீட்டு திட்டமும் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.12 மட்டும் சேமிப்பு கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். சேமிப்பு கணக்கிற்கு ரூ.50 மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.12 என ரூ.62-க்கு சேமிப்பு கணக்குடன் கூடிய விபத்து காப்பீட்டையும் வழங்குகின்றனர்.