/

அரசியலமைப்புச் சட்டத்தை ஸ்டாலின் படிக்க வேண்டும்

பசுவதைத் தடுப்பு குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

பசுவதைத் தடுப்பு குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அரசியல் அமைப்பு சட்டத்தின்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும் பசுக்களைப் பாதுகாக்கவும், துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை. இறைச்சிக்காக பசு, கன்று, எருமை, ஒட்டகம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம் உள்ளது. ஆனால், அதை யாரும் பின்பற்றவில்லை.
ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இந்த சட்டம் அமலில் உள்ளது. பொதுவாக, இந்த சட்டத்தை மாநிலங்களே அமல்படுத்தலாம். ஆனால், மத்திய அரசு கொண்டுவரும்போது, அதனை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும். மொகலாயர் காலத்திலேயே பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள், கன்றுகள் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டின மாடுகளைக் காக்க வேண்டும் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடியவர்கள், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும். இறைச்சிக்காக மாட்டை விற்பனை செய்வது தடை செய்யப்படவில்லை. அது வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 48-ஆவது ஷரத்தில் பசுவதைத் தடுப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் படிக்காமல், ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப, பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால், சோயா பால், பட்டர் எண்ணெய், யூரியா, சோப் பவுடர் போன்றவற்றைக் கொண்டு கலப்பட பால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. ரசாயனம் கலந்த கலப்படப் பாலை விற்பனை செய்யும் தனியார் பால் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டு, மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக டீன் விளக்கம் தர வேண்டும். மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் மீது 17 குற்றவழக்குகள் உள்ளன. எனவே, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது வரவேற்கத்தக்கது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.