/

மாட்டிறைச்சி கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசு முடிவை மாற்றிக் கொள்ளும்: தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை

மாட்டிறைச்சி கட்டுப்பாடு விவகாரத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளும் என்று நம்புவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

மாட்டிறைச்சி கட்டுப்பாடு விவகாரத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளும் என்று நம்புவதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2003-இல் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது, கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிரான மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பின்னர் அந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கைக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தமிழகத்திலும் இது தொடர்பாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மத்திய அரசின் கவனத்துக்கு தமிழக அரசு முறைப்படி கொண்டு செல்லும்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசுக்கு மத்திய அரசு எவ்வாறு ஆதரவு அளித்ததோ அதே போன்ற ஒத்துழைப்பை இந்த விஷயத்திலும் மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரைவில் தனது முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சண்முகம்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சண்முகம், 'தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் அவர்தான் 'நம்பர் ஒன்' ஆக இருந்தார்.
அவர் முன்பு நாங்கள் பூஜ்ஜியம்தான். தில்லிக்கு வந்து பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் சந்தித்துப் பேசுவது வெளிப்படையாகவே நடைபெறுகிறது. யாரைக் கண்டும் நாங்கள் அஞ்சவில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.