/

கிரானைட் முறைகேடு வழக்கு: மு.க. அழகிரி மகன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது வியாழக்கிழமை மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:46 pm

DIN

கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது வியாழக்கிழமை மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததாக பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதில் கீழவளவு அருகே உள்ள சர்க்கரைபீர் மலையில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கும் ஒன்றாகும்.
இவ்வழக்கில் நிறுவனத்தை நடத்தி வந்த நாகராஜ், பாலசுப்பிரமணி மற்றும் நிறுவன பங்குதாரராக இருந்த துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வியாழக்கிழமை கிரானைட் வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்குரைஞர் ஷீலா, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குருசாமி ஆகியோர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அரசுக்கு ரூ. 257 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக 79 வழக்குகளில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு நிரந்தரமாக மாஜிஸ்திரேட் பணியிடம் நிரப்பப்படவில்லை. 
இதனால் இந்த நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடைபெறாமல் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.