சாயக் கழிவில் நொய்யல்; வேதனையில் விவசாயிகள்

கடுமையான வறட்சி, ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இல்லை, எங்கு பார்த்தாலும் குடிநீர்த் தட்டுப்பாடு, நாள்தோறும் குடிநீருக்காகப் போராட்டங்கள் என்று சிக்கித் தவித்த மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது 6 ஆண்டுகளுக
சாயக் கழிவில் நொய்யல்; வேதனையில் விவசாயிகள்

கடுமையான வறட்சி, ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இல்லை, எங்கு பார்த்தாலும் குடிநீர்த் தட்டுப்பாடு, நாள்தோறும் குடிநீருக்காகப் போராட்டங்கள் என்று சிக்கித் தவித்த மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது 6 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் நொய்யலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. ஆனால், அவ்வாறு கிடைக்கப்பெற்ற நீரானது, திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளால் இவ்வளவு பெரிய அளவுக்கு பாழ்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த மாதத் தொடக்கத்தில் பெய்த தொடர் கனமழையால் செப்டம்பர் 5-ஆம் தேதி நொய்யல் ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளம் சென்றது. நொய்யலில் கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பி, நிலத்தடி நீருக்கு ஆதாரமான நொய்யல் சார்ந்த குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பின.
ஆனால், நொய்யலாற்று வெள்ளமானது திருப்பூருக்கு வந்தவுடன் நிறம் மாறியது. முற்றிலும் சாயக் கழிவுநீர் கலந்து வெள்ளம் சென்றது. இதனால், குளம், குட்டைகளிலும் சாயக் கழிவுநீர் புகுந்தது. திருப்பூரில் உள்ள சாய ஆலைகள் மழை வெள்ளத்தைப் பயன்படுத்தி, பாரபட்சம் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவுநீரைத் திறந்து விட்டதே முக்கிய காரணம் என்று விவசாயிகள், பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இது ஓய்வதற்குள், திருப்பூர், முதலிபாளையம், அருகே உள்ள மாணிக்காபுரம் குளத்துக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நொய்யலில் இருந்து சென்ற தண்ணீரில், நீர்வழித்தடத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீர் திறந்துவிடப்பட்டது உறுதி செய்யப்பட்டு, பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கும், அதற்கு கழிவுநீரை அனுப்பி வந்த 23 சாய ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, அதுவரை நொய்யலில் சாயக் கழிவுநீர் கலக்கப்பட்டதற்கு மறுப்புத் தெரிவித்து வந்த தொழில் துறையினருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த விவகாரத்தால் தொழில் துறையினருக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கி, மாறி மாறி அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
சாயக் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பதில் தெரிவித்து வந்தனர்.
ஆனால், கடந்த 19-ஆம் தேதி காலை பார்த்தபோது நொய்யலானது, வெள்ளைப் படலம் போர்த்தியதுபோல் இருந்தது. நொய்யல் ஆற்றில் சென்ற நீர் வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி ஓடியது. இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் விதமாக அமைந்தது. செய்தி ஊடகங்கள் மற்றும் முகநூல், சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பிரச்னை குறித்து ஆய்வு செய்ய வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், கோவையிலிருந்து வந்த சோப்பு நீரே நொய்யல் ஆற்றில் நுரை பொங்கக் காரணம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது விவசாயிகள், பொது மக்களிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முன்னதாக, இதேபோல் நொய்யலில் தொடர்ந்து சாயக் கழிவுநீர் கலக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அமைப்புகள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியதால், கடந்த 2011 ஜனவரியில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி நொய்யல் பாசனப் பகுதியில் சாய ஆலைகள் மூடப்பட்டன. 
இந்நிலையில், நொய்யலில் தொடர்ந்து சாயக் கழிவுநீர் கலக்கப்பட்டு வருவதைத் தடுக்க புகார்கள் பல அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்ட விவசாயிகள் தரப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து நொய்யல் அடிமடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் வி.பி.முத்துசாமி கூறியதாவது: தற்போது பெய்த தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வந்த நீர், சாயக் கழிவால் பாழ்படுத்தப்பட்டுள்ளது. கடும் வறட்சிக்குப் பிறகு கிடைத்த இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்துவிட்டனர். புகார் தெரிவித்தால் சோப்பு நுரை என்கின்றனர். அனைத்து ஊர்களிலும் துணி துவைக்கிறார்கள், சோப்பு நீர் கலக்கிறது, எந்த ஊரில் நுரை இவ்வாறு செல்கிறது? நொய்யல் நீரில் தற்போது உப்புத்தன்மை 3500 டி.டி.எஸ். உள்ளது. குறையாமல் அதிகரித்தே வருகிறது. இவை தவிர, குடியிருப்புகளில் சேகரமாகும் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளும் நொய்யலில் சேர்க்கப்படுகின்றன.
இந்நிலை தொடரக் கூடாது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண, ஆற்றோரத்தில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகள், அவற்றிலிருந்து பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படும் குழாய்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆற்றிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த சாய ஆலையும் அமைக்கக் கூடாது. குடியிருப்புக் கழிவுகள் கலப்பதை மாநகராட்சி, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் கூறியதாவது: நொய்யலில் நுரை வந்ததற்கு மக்கள் பயன்படுத்திய சோப்பு நீரே காரணம். இரு தினங்களுக்கு முன் பெங்களூருவில் பெய்த மழையிலும் இவ்வாறு நுரை வந்துள்ளது. அங்கு சாய ஆலைகள் கிடையாது. எனவே, இந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இருப்பினும் புகார்கள் எழுவதைத் தடுக்க, எங்களது சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையங்த்திலும் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இந்த ஆய்வு நிறைவுபெறும். ஆய்வுக்குப் பிறகு, பொது சுத்திகரிப்பு நிலையங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நாங்களே புகார் அளிப்போம் என்றார்.
இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் இளங்குமரன் கூறியதாவது: விவசாயிகள் பொதுவாகப் புகார் தெரிவிக்காமல், எங்கிருந்து சாயக் கழிவுநீர் கலக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும். ஆற்றோரங்களில் அனுமதியில்லாத சிறிய அறை அளவிலான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றிலிருந்தும் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை நோக்கி செல்லும் திருப்பூரில், சூழலும் மாசுபடாமல், வர்த்தகமும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com