சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று போராடிய மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இப்படியொரு முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது இல்லை என்ற அளவுக்கு போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி.
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை காலை மீண்டும் நடைபெறும். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








