மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாரிசு விவகாரம் தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யாததால், அம்ருதாவிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யத் தேவையில்லை என தமிழக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குல வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரது சகோதரி தீபா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீபக் மற்றும் தீபா சார்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே பதில்மனு தாக்கல் செய்திருந்தனர்.
அம்ருதாவின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் மனு தாக்கல் செய்தார். அதில், அம்ருதா ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு சட்டப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் மரபணு ரத்த உயிரி மாதிரிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
ஆவணங்களில்...: இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சார்பில், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அந்தப் பதில் மனுவில், ''இந்த வழக்கை அம்ருதா உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார். இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவே கூடாது. எந்த ஒரு உண்மையும் இல்லாமல், நிரூபிக்க முடியாத ஆதாரங்களை தாக்கல் செய்து புலன்விசாரணை நடத்தக் கோரும் மனுதாரரின் கோரிக்கை ஏற்கும் படியாக இல்லை. ஜெயலலிதாவுடன்தான் வசித்ததற்கான விவரங்கள், கடந்த 2007-2008-ஆம் ஆண்டுகளின் தமிழக அரசின் ஆவணங்களில் உள்ளதாக அம்ருதா கூறியுள்ளார். அரசு ஆவணங்களில் அந்த விவரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அரசியலமைப்புச் சட்டப்படி...:மேலும் பெங்களூருவில் ஜெயலலிதா மனுதாரருடன் தங்கியிருந்தார் என்பதற்கோ, போயஸ் இல்லத்தில் மனுதாரர் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. இவற்றை எல்லாம் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மனுதாரருக்கு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் அரசு மரியாதையுடனும், கண்ணியத்துடனும் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது உடலை சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று மனுதாரரோ ஜெயலலிதாவின் உறவினர்களோ கோரவில்லை.
ஆர்.கே.நகர் தேர்தல்...: கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு குழந்தைகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மனுதாரர் ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பது உறுதியாகிறது.
மனுதாரர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக, கடந்த 2002-2003-ஆம் ஆண்டுக்கான தொலைபேசி ரசீதுகளை ஆதாரங்களாகத் தாக்கல் செய்துள்ளார். இவை எல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்பானது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, தொலைபேசிகளில் பேசியதற்கான விவரங்கள் ஓராண்டு மட்டுமே பராமரிக்கப்படும்.
டி.என்.ஏ. சோதனை...: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும், அவரது இறுதிச் சடங்கிலும் மனுதாரர் கலந்து கொண்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கில் மனுதாரரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு வியாழக்கிழமை (ஏப்.19) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


