விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை

எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:42 am IST

எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இங்கிலாந்தின் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்ததாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நியச் செலாவணி வழக்குப்பதிவு செய்தது. இதே போல் ஐரோப்பிய நாடுகளில் ஹோட்டல் தொடங்குவதற்காக பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் சார்பில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் தன் மீதான மற்றொரு வழக்கின் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பார்க்லே வங்கியில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான முதல் வழக்கின் அடிப்படையில்தான் இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. எனவே இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. முதல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது வழக்கை தனியாக விசாரிக்கக் கூடாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர், வழக்கை இழுத்தடிக்கவே டிடிவி தினகரன் ஒவ்வொரு மனுவாக தாக்கல் செய்கிறார். எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை வரும் ஜூன் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் அதுவரை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் டிடிவி தினகரன் மீதான மற்றொரு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.