ஊழல் புகார் தெரிவிக்க மநீம கட்சியினருக்காகப் புதிய செயலி: அறிமுகம் செய்தார் கமல்

மக்கள் பிரச்னைகள் மற்றும் ஊழல்கள் குறித்து புகார் தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்காக அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புதிய செயலியை திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
புதிய செயலியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்துகிறார் அதன் தலைவர் கமல்ஹாசன்.
புதிய செயலியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்துகிறார் அதன் தலைவர் கமல்ஹாசன்.
Updated on
1 min read

மக்கள் பிரச்னைகள் மற்றும் ஊழல்கள் குறித்து புகார் தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்காக அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புதிய செயலியை திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
MAIAM WHISTLE என்ற புதிய செயலியின் அறிமுக விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய செயலியை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் கூறியது: ஓரிடத்தில் நடக்கும் குற்றங்கள் மற்றும் ஊழல்களைத் தனி மனிதர்கள் அபாயச் சங்காக ஊதித் தெரியப்படுத்தும் கருவிதான் இந்தச் செயலி. மக்களின் முகவர்கள் போல இது செயல்படும். மக்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கும் கருவியாகவும் பயன்படும். முதலில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் கையில் இதை ஒப்படைக்கிறோம். காவல் துறைக்கு, அரசுக்கு உதவக்கூடிய வகையிலும், விமர்சிக்கக் கூடிய வகையிலும் இருக்கும். அதே சமயம், இந்தச் செயலியை மந்திரக்கோலாகப் பார்க்க வேண்டாம். மக்களின் குறைகளையும், ஊழல்களையும் புரிந்துகொள்ள உதவும் கருவியாகப் பாருங்கள்.
கிராம சபையில் பங்கேற்பு: 
மநீம சார்பில் தத்து எடுக்கப்பட்ட கிராமம் திருவள்ளூரில் உள்ள அதிகத்தூர். இந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடைத்தால் பங்கேற்பேன். அனுமதி கிடைக்காவிட்டால், கூட்டம் முடிந்த பிறகு மக்களிடம் குறைகளைக் கேட்டறிவேன் என்றார் கமல்.
செயலியின் செயல்பாடு: 
MAIAM WHISTLE புதிய செயலியை 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். குடிமகன், களவீரர்கள் என்ற இரு பிரிவின் கீழ் செயலி செயல்படும். குடிமகன் பிரிவில் அவரவர் வசிக்கும் இடங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் ஊழல்கள் குறித்து தெரியப்படுத்தலாம். இதைக் கள வீரர்களாகச் செயல்பட விரும்புவர்கள் நேரில் ஆய்வு செய்து உண்மை தன்மையைப் பதிவு செய்ய வேண்டும். ஒரு குடிமகன் கூறிய புகாரை மூன்று களவீரர்கள் உண்மை என பதிவு செய்தால், அது குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்தச் செயலியில் மோசமான தகவல்களை வெளியிட்டு, முறையற்ற நடவடிக்கையில் யாராவது ஈடுபட்டால் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர் என்று கமல்ஹாசன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com