குடியரசுத் தலைவர் விருதுகள்: தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்

குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில், தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது.
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில், தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது.
'தமிழ் மொழி தவிர்க்கப்பட்டிருப்பது ஏன்?' என்ற தலைப்பில் 'தினமணி'யில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இந்தச் செய்திக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:-
தமிழ்மொழிக்கு மட்டுமே 2004-ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் வழியாக செயல்பட்டு வந்த தமிழ்ப் பிரிவு பிரிக்கப்பட்டு சென்னையில் தமிழுக்கென தனி நிறுவனமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் 2008-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கி வரும் இந்த நிறுவனத்தால் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் அறிஞர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் 66 விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
மகரிஷி விருதுக்கு இணையானது: தமிழகத்தில் தமிழுக்கென செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று, மத்திய அரசால் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகள் ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகும். மேலும், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அராபிக், பாரசீகம் போன்ற மொழிகளுக்கு இவ்வாறு தனி நிறுவனம் அந்தந்த மாநிலங்களில் தன்னாட்சி அளிக்கப்பெற்று அமைக்கப்படவில்லை.
மாறாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கிளை அலுவலகங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தமிழைத் தவிர பிற மொழிகளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் பெற விளம்பரம் வெளியிடுகிறது.
'தினமணி' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுக்கு நிகராக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் தொல்காப்பியர் விருதும், குறள்பீட விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் விருதுகள்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழியாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய தேர்வுக் குழுவால் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடுகின்றன. 
தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
2016-17-ஆம் ஆண்டு விருதுகளுக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வுக் குழு நியமிக்கப்பட்டு, விருதாளர்களை தேர்ந்தெடுக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது மட்டுமின்றி, தன்னாட்சி அளிக்கப்பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவதால், குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறையின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com