தமிழகத்தில் இதுவரை 15 லட்சம் வெளிநாட்டவர் சிகிச்சை: ஆளுநர் புரோஹித்
வெளிநாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக இதுவரை தமிழகத்துக்கு வந்துள்ளனர் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.


வெளிநாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக இதுவரை தமிழகத்துக்கு வந்துள்ளனர் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
உலகத் தமிழ் வர்த்தக சபையின்சார்பில், மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 2 -ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் 15 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு: வாழ்நாள் சாதனையாளர் விருது அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா விருதைப் பெற்றுக் கொண்டார். இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் முத்துவீரமணி உள்ளிட்டோருக்கும், சிறந்த சமூக சேவையாற்றியதற்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது:
நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தமிழகம் எப்போதுமே முன்னிலையில் உள்ளது. பொது சுகாதார சட்டத்தை முதன்முதலில் இயற்றியது தமிழகம்தான். மருத்துவச் சுற்றுலாவின் மையமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டவர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 15 லட்சம் வெளிநாட்டு நோயாளிகள் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
சிறந்த மருத்துவச் சேவையுடன், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படுவதும் வெளிநாட்டவர்கள் தமிழகத்துக்கு வருவதற்கு முக்கியக் காரணமாகும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களும், பிற நாட்டவர்கள் தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வருவதற்கு காரணமாக உள்ளனர்.
அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவமும் தமிழகத்துக்கு கூடுதல் சிறப்பை அளிக்கின்றன.
ஒருங்கிணைந்த, உலகத்தரமான, குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவத் துறையின் தற்போதைய சவாலாகும். இந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான வழி சிக்கலானதாக காணப்படுகிறது. மருத்துவத் துறையின் ஜாம்பாவான்கள் மூலம் இதனை சாத்தியமாக்க வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...