பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையின் ரூ.328 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை வியாழக்கிழமை முடக்கியது.
இதுகுறித்த விவரம்:
சென்னை, தியாகராய நகரை தலைமையிடமாகக் கொண்டு நாதெள்ளா சம்பத் செட்டி குழுமம் சார்பில் பல்வேறு இடங்களில் நகைக் கடைகள் நடத்தப்பட்டு வந்தன. முக்கியமாக தியாகராய நகர், அண்ணா நகர், புரசைவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, ஓசூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இந்த நிறுவனத்துக்கு நகைக் கடைகள் உள்ளன.
இந்நிலையில் இந்த நிறுவனம், ஆண்டுக்கு சுமார் ரூ.157 கோடி நகைகளை விற்று வந்த நிலையில், ரூ.517 கோடி நகைகளை விற்பதாக போலி கணக்கு காட்டியும், போலி ஆவணங்கள் மூலமாகவும், நகைகள் இருப்பு அதிகமாக இருப்பதாக கூறியும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 3 வங்கிகளில் ரூ.380 கோடி கடன் வாங்கியது. இந்த கடனையும் அந்த நிறுவனம் முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி அதிகாரிகள், நாதெள்ளா நிறுவனம் கடன் வாங்குவதற்காக சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானவை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில், கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி மோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம், நாதெள்ளா சம்பத் செட்டி குழும நிர்வாகத்தின் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதியப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரியவந்ததால், அதுகுறித்து அமலாக்கத் துறையினரும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக, அமலாக்கத் துறையினர் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ரூ.328 கோடி சொத்து முடக்கம்: இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை முடக்கினர். இதில் முக்கியமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீடு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உத்தண்டியில் உள்ள கடற்கரை பங்களா, கோயம்பேட்டில் உள்ள திருமண மண்டபம், அண்ணாநகர், புரசைவாக்கம், தியாகராயநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகள், மீஞ்சூரில் உள்ள விவசாய நிலம், அம்பத்தூரில் உள்ள பள்ளி உள்ளிட்ட 37 அசையா சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.328 கோடியாகும். இந்த வழக்கில் அடுத்த கட்டமாக, மேலும் சில சொத்துகளை முடக்குவதற்குரிய நடவடிக்கையில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









