தொகுதி மறுவரையறையை ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
முதல் கெடு: வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, அதேஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டிருந்தது.
இரண்டாம் கெடு: உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் ஆகியோரும், உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர் பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குரைஞர் மு.பழனிமுத்து உள்ளிட்டோர் தனித் தனியாக வழக்குத் தொடர்ந்திருந்ததனர்.
இந்த வழக்குகளைக் கடந்த ஆண்டு முதல் விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2017 நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் மீண்டும் கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது.
மூன்றாம் கெடு: மாநில தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பாணையையும் வெளியிடாததால் திமுக சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ்கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
எச்சரிக்கை: வழக்கு விசாரணையின் போது அதிகாரிகள் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை, நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அட்டவணையைத் தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
தேர்தல் எப்போது? இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெஃரோஸ்கான் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிலுவையில் உள்ள இந்த மறுவரையறை பணி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விடும்.
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை செய்தது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கையை ஆய்வு செய்து தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டு, மறுவரையறை குறித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.
இந்த அறிவிப்பாணையை அரசு வெளியிட்ட 6 வார காலத்துக்குள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான வார்டுகளை ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இந்த ஒதுக்கீடு முறை, தொகுதி மறுவரையறைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்ட பின், 3 மாத காலத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு அமர்வுக்கு மாற்றம்: அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அக்கறை இல்லை. தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் அவர்கள், இந்த ஆண்டு தேர்தலை நடத்தமாட்டார்கள்.
எனவே, தேர்தல் ஆணையர், செயலாளர், ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நேரடியாக சிறைக்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டார்.
அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.எல்.சோமயாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை (ஆக.7) விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


