திருமுருகன் காந்தியை கைது செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம் 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்று திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமுருகன் காந்தியை கைது செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம் 

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்று திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை நிலையைப் பேசியதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து, அவர் நாடு திரும்பியதும் பெங்களூரு விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கினை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரட் நீதிமன்றம், திருமுருகன் காந்தியின் செயல்பாடுகளில் தேசத்துரோக நடவடிக்கை எதுவுமில்லை என காவல்துறையை கடிந்து கொண்டதுடன், அவரை சிறைக்கு அனுப்பவும் மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளான பிறகும் காவல்துறை, தன் கடுமையான இயல்பை மாற்றிக்கொள்ளாமல், எப்படியும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்தில், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் திருமுருகன் காந்தி மீது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கினை தூசு தட்டி எடுத்து கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயலாகும்.

போராடுகிற மக்கள் மீது துப்பாக்கி சூடு, அதனைக் கண்டித்து குரல் எழுப்புவோர் மீது தேசத்துரோக வழக்கு என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக நெறிமுறைகளை பூட்ஸ் காலால் நசுக்கும் சர்வாதிகாரப் போக்காகும். பிரச்சினைகளைத் தீர்க்காமல், ஆட்சியாளர்கள் காவல்துறை மூலம் உரிமைக்குரலை ஒடுக்கிவிடத் துடிக்கும் இந்த ஆபத்தான போக்கிற்கு திமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, திருமுருகன் காந்தியை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com