பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்மொழிந்து, மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பு, தனித்த குரலாகவே தனிமைப் பட்டுவிட்டது. தேசிய அளவில் அது எதிரொலிக்கவில்லை. மேலும் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம்.
தேசிய அரசியலில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2017-இல் கருணாநிதியின் சட்டப்பேரவைப் பணி வைர விழா பொதுக்கூட்டத்தை, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டமாக மு.க.ஸ்டாலின் நடத்தினார். இதில், ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு தேசிய, மாநிலத் தலைவர்கள் பங்கேற்று பாஜகவுக்கு எதிராக உரையாற்றினர். ஆனால், கூட்டம் முடிந்த சில மாதங்களில் பிகாரில் அரசியல் நிலவரங்கள் மாறி, பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட்சி அமைத்தார்.
கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தையும் தேசியத் தலைவர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் குலாம்நபி ஆசாத் பங்கேற்றார். முன்னாள் பிரதமர் தேவெகௌடா, சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, பாஜகவின் சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடந்தாலும், ராகுல் பங்கேற்காமல் நிதின் கட்கரி பங்கேற்றது பாஜகவின் பக்கம் திமுகவுக்கு ஒட்டுதல் இருக்கிறதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியது. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு திமுக மறைமுகமாக முயற்சித்து வருவதாகவும் வெளிப்படையாகப் பேசப்பட்டு வந்தது.
கடந்த 16-ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்ததுடன் தேசியக் கட்சித் தலைவர்களையும், மாநிலக் கட்சித் தலைவர்களையும் அதை வழிமொழியுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், இதை இதர தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸுடன் கூட்டணியை உறுதிசெய்யும் விதமாகவே இந்த பொதுக்கூட்டம் இருந்தது என்று சொல்லலாம். ஸ்டாலினின் அழைப்பு காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளிடையே அகில இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை.
திடீர் விஜயம்: கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க மு.க.ஸ்டாலினால் முதலில் அழைக்கப்பட்டவர் ராகுல் காந்திதான். ஆனால், அவர் தேதி கொடுக்காத நிலையில் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்க அவரும் சம்மதம் தெரிவித்ததன் பேரில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு சோனியா நேரில் அழைக்கப்பட்டார்.
அழைப்பிதழில் பெயர் இடம்பெறாத நிலையிலும் சோனியா உடன் ராகுலும் வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
ஸ்டாலின் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் பாஜகவுக்கு எதிரான கூட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டதால் அரசியல் பொதுக்கூட்ட வழக்கத்தின்படி சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி ஆகியோர் வீர வெள்ளி வாளை தூக்கிப் பிடித்து நிற்பது என முடிவு செய்து, அதற்கேற்ப வாள்களும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், ராகுலின் திடீர் விஜயத்தால் கூட்டத்தில் நாராயணசாமியின் வாள் பறி போய், அதை ராகுல் பிடித்து நின்றார். இதுபோன்ற குழப்பங்களுக்கிடையில் ராகுலின் திடீர் விஜயமும் அதன் மீதான அரசியலும்தான் அதிகம் பேசும் பொருளாகிவிட்டது.
துருப்புச்சீட்டான ஸ்டாலின்: கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டபோது, காங்கிரஸ் அதைக் கேலி செய்தது. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்றோர் பிரதமர் வேட்பாளர் என்று கூறியா தேர்தலைச் சந்தித்தனர்? பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பிரதமராக முயற்சிக்கின்றனர். இதைத் தடுக்கும் நோக்கில்தான் ஆர்.எஸ்.எஸ். சார்பில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார் என்று காங்கிரஸ் விமர்சித்தது.
ஆனால், இப்போது அதே காங்கிரஸ் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதால், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக காங்கிரஸுடன் இணைந்து செயல்படத் தயாராகி இருக்கும் மம்தா பானர்ஜி, மாயாவதி உள்பட எந்தத் தேசிய, மாநிலத் தலைவர்களும் பிரதமர் வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்து கொள்ளலாம் என்றே அவர்கள் கூறி வருகின்றனர்.
கருணாநிதியின் இரங்கல் கூட்டத்திற்கு வராத ராகுல், அவரின் சிலை திறப்பு விழா கூட்டத்தில் பங்கேற்றுள்ளதன் மூலம் மு.க.ஸ்டாலினை இந்த விஷயத்தில்துருப்புச் சீட்டாக்கியுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. தேசிய அரசியலில் ஓர் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மு.க.ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்த முன்மொழிவை மாநிலக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் வழிமொழியவில்லை. மாறாக பலத்த எதிர்ப்புதான் எழுந்துள்ளது.
இடதுசாரிகள் நிலை: தேசிய அளவில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட மார்க்சிஸ்ட் கட்சி, மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு முன்பும், பின்பும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளது. மக்களவைத் தேர்தல் என்பது பிரதமரைத் தேர்வு செய்வதற்காக நடைபெறுவது அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தாம் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்வர். அதன் அடிப்படையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்வோம் என்று மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு ஆதரவு இல்லை: பாஜகவுக்கு எதிரான கட்சிகளை காங்கிரஸின் தலைமையில் ஒருங்கிணைப்பதில் தீவிரமாக இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஸ்டாலினின் கருத்தை ஏற்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தென்மாநிலங்களில் இருந்து ஒருவரை பிரதமரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய சூழல் வரலாம். அப்படி வரும்போது தனது பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்பதுதான் சந்திரபாபு நாயுடுவின் எண்ணம். இதேபோல், காங்கிரஸுக்குப் பெரும்பான்மை இல்லாத சூழலில் தன்னையே பிரதமராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாயாவதியும் இருந்து வருகிறார். இன்னும் சொல்லப் போனால் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்துவதற்குக் காங்கிரஸில் கூட எதிர்ப்பு இருந்து வருகிறது.
காங்கிரஸும் தவிர்ப்பு: இந்தப் பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் காங்கிரஸ் தலைமையும் பிரதமர் பதவி என்பது இரண்டாம்பட்சம்தான், பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும், இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு ஓரணியில் திரள வேண்டும் என்ற முழக்கத்துடனே இதுவரை தில்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அனைத்துத் தலைவர்கள் பங்கேற்று, பிரதமர் பதவி என்ற பொருள் குறித்து மட்டும் பேசாமல் ஓரணியாவது குறித்து பேசினர்.
ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்கிற ஸ்டாலினின் அழைப்பு தோழமை கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் நான் சொல்வதை தோழமை கட்சிகள் இப்போது ஏற்காவிட்டாலும் பின்னர் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஸ்டாலின் கூறிவந்தாலும் அவரது விளக்கத்தை ஏற்க தேசிய கட்சிகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இல்லை.
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்திருக்கும் நிலையில், அதற்கேற்றாற்போல மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பைத் திமுக எப்படி சமாளிக்கப்போகிறது என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இதயத்தில் இடம் தந்து காங்கிரஸாரின் எதிர்பார்ப்பை ஸ்டாலினால் சமாளிக்க முடியுமா என்பதுதான் கேள்வி!
மம்தா எதிர்ப்பு
பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், பிரதமர் வேட்பாளர் பேச்சுவார்த்தை கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
கருணாநிதியின் பேரவை வைர விழா மற்றும் இரங்கல் பொதுக்கூட்டம் இரண்டிலும் மம்தா பானர்ஜி சார்பில் பங்கேற்றவர் அக் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரிக் ஓ ப்ரையன். அதனால்தான் அவர் மு.க.ஸ்டாலினின் கருத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தது, காங்கிரஸுடன் நல்லுறவில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக அவர் சாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தற்கொலை

ராணிப்பேட்டையில் காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலத்தில் ரூ. 4.5 லட்சம் வருவாய்

தோ்வு ரத்து முடிவு எதிரொலி: ஜாா்க்கண்டில் அரசு ஊழியா்கள் 2-வது நாளாக போராட்டம்

உத்தரகண்ட்: பலத்த மழையில் சிக்கிய 8 போ் மீட்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



