இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாரதியார் பல்கலை. முறைகேடுகள் விவகாரம் ஆவணங்களை எரித்த துறைத் தலைவரிடம் விசாரணை

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் ஒருவர் போலீஸ்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:21 pm

DIN

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர் ஒருவர் போலீஸ் விசாரணைக்குப் பயந்து தன்னிடம் இருந்த சில ஆவணங்களை எரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணைவேந்தரிடம் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இதில் பல துறைத் தலைவர்கள், துணைவேந்தர் அலுவலகப் பணியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அது தொடர்பான விசாரணைக்குப் போலீஸார் எப்போது வேண்டுமானாலும் வரக் கூடும் என்றும் தகவல் பரவியிருப்பதே இதற்குக் காரணம்.
ஆவணங்கள் எரிப்பு: இதற்கிடையே, பல்கலைக்கழகத்தின் ஒரு துறைத் தலைவரிடம் இரு காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை காலத்தில் இருந்தே பணி நியமனங்களுக்கு இடைத்தரகராக இருந்திருப்பதும், அவர்தான் தற்போது கணபதிக்கும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
துணைவேந்தர் கைது செய்யப்பட்ட அதே நாள் இரவில் இந்தத் துறைத் தலைவர் தன்னிடம் இருந்த சில ஆவணங்களைத் தீயிட்டு எரித்திருப்பது போலீஸுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்தே அவரிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே துணைவேந்தர் தொடர்புடைய ஆவணங்களைக் கைப்பற்றி வரும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு அதிகாரிகள் துணைவேந்தர் யார் யாரிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தார் என்பது போன்ற விவரங்களுக்காக அவரது செல்லிடப்பேசி அழைப்பு விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதைப் போலவே, சம்பவம் நடைபெற்றபோது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள், காசோலைகளைக் கையாண்ட துணைவேந்தர், அவரது குடும்பத்தினரிடம் இருந்து சில ஆடைகள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று பணி நீக்கம்?: துணைவேந்தர் கைது நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையினர் அரசுக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையிலும், அரசு ஊழியரான இவர் 48 மணி நேரமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளதாலும் கணபதி மீது துறை ரீதியான நடவடிக்கையாக தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு ஆளுநர் மாளிகையில் இருந்து செவ்வாய்க்கிழமைக்குள் வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் ஆலோசனைகள்: துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணி நியமனங்கள் தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்த இருப்பதாகக் காவல் துறை தெரிவித்திருப்பதால் சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் கடந்த 2 நாள்களாக தாங்களாகவே கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதைப் போலவே பணி நியமனம் பெற்றவர்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஜாமீன் மனு விசாரணை: இதற்கிடையே தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி, சிறப்பு நீதிபதியிடம் துணைவேந்தர் கணபதி அளித்திருந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.