காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூரில் இருந்து 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி

காதலர் தினக் கொண்டாட்டம் என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள்தாம். ரோஜா மலருக்கு காதலர்கள் மத்தியில் எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூரில் இருந்து 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி
Updated on
1 min read

காதலர் தினக் கொண்டாட்டம் என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள்தாம். ரோஜா மலருக்கு காதலர்கள் மத்தியில் எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு. இந்த ரோஜாக்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஒசூர் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ரோஜா மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒசூரில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, அரசு வழங்கும் மானிய விலையில் பசுமைக் குடில் மற்றும் அரசு வழங்கும் 100 சதவீத சொட்டுநீர்ப் பாசன வசதிகளைப் பயன்படுத்தி ரோஜாக்களை உற்பத்தி செய்கின்றனர். 
ஒசூர் அருகே பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓர் ஏக்கரில் 50,,000 ரோஜாக்கள் கிடைக்கும். ரோஜா மலர்களை பல வண்ணங்களில் உற்பத்தி செய்தாலும், காதலர்களுக்கு மிகவும் விருப்பமானது சிவப்பு ரோஜாக்கள்தாம். தாஜ்மஹால் ரகமான இது காதலர்கள் விரும்பி வாங்கும் மலராக உள்ளது. 
குறிப்பாக நோப்லஸ், கோல்டு ஸ்ட்ரைக், கார்வெட்டி, தாஜ்மகால், பீச் அவலஞ்ச், டி.ஏ. என்ற பலவிதவிதமான ரோஜாக்கள் இப் பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. இந்த ரோஜாக்கள் தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட பின்னர், குளிர்பதனக் கிடங்கில் 2 நாள்கள் வைத்து பாதுகாக்கப்பட்டு, பின்னர் பெங்களுரு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் ஜரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், உள்நாட்டில் சென்னை, கேரளம், தில்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் ஆண்டுதோறும் அனுப்பப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒசூர் பகுதி ரோஜாக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது சீனா- இந்தியாவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், நமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, இப் பகுதி ரோஜா உற்பத்தியாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
ஆயினும் இந்தாண்டு, 2 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com