இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர் சென்னையில் கைது

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரை தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், சென்னையில் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:45 pm

DIN

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரை தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், சென்னையில் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹாஜா பக்ருதீன். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த இவர், சிரியாவுக்கு சென்று அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் அந்த இயக்கத்துக்கு நிதி, ஆள் திரட்டுவதற்கும், ஆதரவு திரட்டுவதற்கும் தமிழகம் வந்துள்ளார். 
சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஐ.எஸ். இயக்க ஆதரவு எண்ணங்களை கொண்ட இளைஞர்களை சந்தித்து கூட்டம் நடத்தியுள்ளார். அவர்களிடம் பக்ருதீன் நன்கொடையும் பெற்றுள்ளார். அதேபோல், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர நினைத்தோரை பக்ருதீன் மூளைச் சலவை செய்து, சிரியா அழைத்து செல்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார். 
அப்போதுதான் சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி, திருவிதாங்கோடு உத்தமன் தெருவைச் சேர்ந்த மீ.அன்சார்மீரானுக்கும் (29), ஹாஜா பக்ருதீனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. ஐ.எஸ். இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அன்சார், ஹாஜா பக்ருதீனுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். முக்கியமாக ஹாஜா பக்ருதீன் குடும்பத்துடன் சிரியா செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை அன்சார் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஹாஜா பக்ருதீனுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்ததாகவும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு திரட்டியதாகவும், சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த மு.சாகுல் ஹமீது, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த சி.காஜா மொய்தீன் என்ற அப்துல் லத்தீப் ஆகியோரை, கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் கைது: இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள், அன்சாரை தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த அன்சாரை என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்சார், சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ரகசிய இடத்தில் விசாரணை: கைது செய்யப்பட்ட அன்சாரை, ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
இதையடுத்து அவர், 15 நாள்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய எதிரியான ஹாஜா பக்ருதீன் சிரியாவில் இருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இவ்வழக்கில், ஐ.எஸ். அமைப்புக்கு வேறு யாரேனும் நன்கொடை வழங்கினார்களா, அந்த அமைப்பில் சேருவதற்கு சிரியா சென்றனரா என்பதை துப்பு துலக்க அன்சாரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டமிட்டுள்ளது. இதற்காக, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) மனு தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.