மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஜெயலலிதா மறைவால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம்: முதல்வர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

News image
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப் பேரவையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார் பேரவைத் தலைவர் ப.தனபால். உடன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர்
Updated On :12 பிப்ரவரி 2018, 11:23 pm

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவப் படம் சட்டப் பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இவ்விழாவுக்கு தலைமையேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு பதவியேற்று, ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில் இந்த விழா நடக்கிறது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அதன்பின், பல சோதனைகளையும், வேதனைகளையும் வெற்றிகரமாகக் கடந்து ஆறு முறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகத்தைத் திறம்பட வழிநடத்தினார்.
1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார். அதேபோன்று, 2001, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுகவை பெற்றி பெறச் செய்து சாதனை படைத்தார்.
தனக்கென்று தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தமிழகத்தின் நலனே, தன்நலன் என்று கருதி அயராது உழைத்தவர். காவிரி, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைகளில் வரலாற்றுச் சாதனை படைத்தார். பல்வேறு சாதனைகளைப் படைத்த தலைவர் குறித்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றவும், அவருக்கு பிரமாண்ட நினைவு மண்டபம் அமைக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொடரும் திட்டங்கள்: விலையில்லாத அரிசி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், அம்மா குடிநீர், விலையில்லாத மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவர் மறைந்த ஜெயலலிதா. அவரது வழியில் ஒரு சிறுதுளி கூட மாறாமல் அனைத்து நலத்திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார். பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். 
மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர்கள், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், அரசு வழக்குரைஞர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


"ஆண்டவன் அருள் முக்கியம்'

ஆண்டவன் அருள் முக்கியமானது எனக் கூறிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதை ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.
சட்டப்பேரவை மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவர் மேலும் பேசியது: காந்தபுர நகரம் என்றொரு நகரம். அரசன் இருப்பதால் எல்லாம் நடக்கிறது எனக் கூறும் ராஜபக்தனும், எல்லாம் ஆண்டவன் அருள் எனக் கூறும் இறை பக்தனும் வாழ்ந்து வந்தார்கள். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். ஒரு நாள் மாறுவேடத்தில் வந்த ராஜா, பூசணிக்காய் ஒன்றை குடைந்து அதில் தங்க நாணயங்களையும், வைரங்களையும் போட்டு மூடிவிட்டு, அதை ராஜ பக்தனுக்கு பரிசாகக் கொடுத்தார். சிறிய பரிசு என நினைத்த பக்தன் அதை கடையில் விற்றுவிட்டார். ஆனால், ஆண்டவன் அருள் எனக் கூறும் பக்தர், அதே பூசணிக்காயை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த நினைத்தபோது அதில் இருந்த நாணயங்களைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு போய் ராஜாவிடம் முறையிட்டார். அப்போது ராஜா, இதை நீயே வைத்துக் கொள். ஆண்டவன் அருள் மிகப்பெரியது எனக் கூறி ஆண்டவ பக்தனை ஆச்சரியப்பட வைத்தார். இதுபோன்று, ஆண்டவன் அருள் என்பது அனைவருக்கும் முக்கியம் என பேசினார் முதல்வர் பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.