

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஆ.கணபதி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முன்னாள் மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, துணைவேந்தரின் அலுவலகம், வீடு, பதிவாளர் அலுவலகம், பேராசிரியரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இதனிடையே, ஆ.கணபதி, தர்மராஜ், தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புக் காவல் துறை அலுவலகத்தில் முன்னாள் மாணவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
முனைவர் பட்டத்துக்கு ரூ.5 லட்சம் லஞ்சமா?
பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கு ரூ. 5 லட்சம் வரையில் கணபதி உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் குறித்து பி.எச்.டி.படித்து முடித்த மாணவர்கள் மற்றும் தற்போது படித்து வரும் மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மேலும் பல பேராசிரியர்கள் பிடிபட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் துணைவேந்தர் கணபதி, தர்மராஜ் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் அனுமதி அளித்து கணபதி, தர்மராஜை ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது பாரதியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.