விலங்குகள் நல வாரியம் ஹரியாணாவுக்கு மாற்றம்: விலங்குநல ஆர்வலர்கள் அதிருப்தி ஸ்ரீதேவி குமரேசன்

சென்னை திருவான்மியூரில் இயங்கிய இந்திய விலங்குகள் நல வாரியம், ஹரியாணாவுக்கு மாற்றப்பட்டிருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகள் நல வாரியம் ஹரியாணாவுக்கு மாற்றம்: விலங்குநல ஆர்வலர்கள் அதிருப்தி ஸ்ரீதேவி குமரேசன்
Updated on
2 min read

சென்னை திருவான்மியூரில் இயங்கிய இந்திய விலங்குகள் நல வாரியம், ஹரியாணாவுக்கு மாற்றப்பட்டிருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய அரசு விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க சட்டப்படியாக அமைக்கப்பட்ட வாரியமாகும். இந்த விலங்குகள் நல வாரியம் விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960-இன் பிரிவு நான்கின்படி நிறுவப்பட்டது ஆகும். இந்த வாரியம் அமைக்கப்பட காரணமாக இருந்தவர் மனிதவியலாளர் ருக்மிணி தேவி அருண்டேல். இவரே, இந்த வாரியத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், இந்த வாரியத்தில் 28 உறுப்பினர்கள் உள்ளனர்; இவர்களது பணிக்காலம் 3 ஆண்டுகளாக உள்ளது.
தொடக்கக் காலத்தில் இந்திய அரசின் உணவு மற்றும் வேளாண் அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கி வந்த இந்த வாரியம். இப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த வாரியம் சென்னை திருவான்மியூரில் 1962 - ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்தியாவில் விலங்குகளின் நலத்தை மேம்படுத்துவது, விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவது, விலங்குகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படக் காட்சிகளுக்கு அனுமதி, தடையில்லா சான்று, சர்க்கஸ் உள்ளிட்ட நிகழ்வுகளில் விலங்குகளை பங்கேற்கச் செய்வதற்கு அனுமதி வழங்குவது போன்ற பணிகளை இவ் வாரியம் செய்து வந்தது.
ஹரியாணாவுக்கு மாற்றம்: இந்நிலையில், திடீரென இந்த அலுவலகம் ஹரியாணாவில் உள்ள ஃபரிதாபாத் அருகே தில்லி மற்றும் ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சிக்ரி என்ற கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 8-ம் தேதி முதல் மேலே குறிப்பிட்டவற்றுக்கு அனுமதி பெற இனி புதிய முகவரியையே அணுக வேண்டும் என்று இந்திய விலங்குகள் நலவாரியம் தெரிவித்துள்ளது. 
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் இந்த நடவடிக்கை விலங்குகள் நல ஆர்வலர்களிடமும்,விலங்குகளை பாதுகாக்கும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவுக்கு இந்த வாரியம் திடீரென மாற்றப்படதற்கான காரணத்தை அந்த வாரிய அதிகாரிகள் தெரிவிக்காதது விலங்குகள் நல ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விலங்குகள் நலவாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணன் கூறியது: இது குறித்து இந்திய விலங்குகள் நலவாரியத்துக்காக தமிழக அரசு ரூ.2 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டி கொடுத்த பின்னர், அந்த வாரியம் ஹரியாணாவுக்கு மாற்றப்படுவது கவலைக்குரியதே. இதனால் தமிழக அரசு செலவிட்ட நிதி வீணாகியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை எங்களைபோன்ற விலங்குகள் நல ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூ கிராஸ் கருத்து: இது தொடர்பாக சென்னை ப்ளூ கிராஸ் அமைப்பின் பொதுமேலாளர் டான் வில்லியம் கூறியது: இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் செயல்படலாம். தற்போது சென்னையில் இருந்து இந்த வாரியத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. இதுவரை சொந்தக் கட்டடத்தில் இருந்து செயல்பட்ட இந்த வாரியம், தற்போது வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை தமிழக அரசு கேட்க வேண்டும். 
இந்த வாரியத்தை சுற்று சூழல் மாசு அதிகமுள்ள ஹரியாணா மாவட்டத்தின் ஃபரிதாபாத்திற்கு மாற்றியிருப்பது மிகுந்த வருத்தத்துக்குரிய செயலாகும். தமிழக அரசு இப் பிரச்னையில் தலையீட்டு, இந்திய விலங்குகள் நல வாரியம் ஹரியாணாவுக்கு மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 
விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா கூறியது: கடந்த 1962-இல் இருந்து சென்னையில் செயல்பட்டு வந்த விலங்கு நல வாரியம் தற்போது ஹரியாணா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது எதனால் என்பது தெரியவில்லை. ருக்மணி தேவி அருண்டேல் ஆரம்பித்த காலத்தில் இருந்து சின்னிகிருஷ்ணன் இருந்த காலம் வரை நல்ல முறையில் செயல்பட்டு வந்த இந்த வாரியத்தின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து 
திரைப்பட துறையினருக்கு நெருக்கடி கொடுக்கும் வீதமாக அமைந்தது.
பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நல வாரியம் ஹரியாணாவுக்கு மாற்றப்பட்டது வேதனைக்குரியதே ஆகும். விலங்கு நல வாரியத்தின் முக்கிய நோக்கமே மிருகவதை தடைச் சட்டத்தை செயல்படுத்துவதுதான். ஆனால் விலங்குகள் நல வாரியம் அதை செயல்படுத்துவதில் கூட பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை என்றார் அவர்.
பாதிக்கப்படும் தென்னிந்திய திரைப்படத்துறை
இந்திய விலங்குகள் நல வாரியம் சென்னையில் இருந்து ஹரியாணாவுக்கு மாற்றப்படுவது, தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 
திரைப்படங்களில் வன விலங்குகள் தொடர்பான காட்சிகள் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னரே, வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது.
திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தால் தமிழ் திரைப்படத்துறையினர், எளிதாக சென்னையிலேயே அதற்குரிய அனுமதியை இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் இது வரை பெற்று வந்தனர். ஆனால் இனி திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் காட்சிகள் இடம் பெற்றால், அவர்கள் ஹரியாணாவுக்கு செல்ல வேண்டும். இது விலங்கு ஆர்வலர்களை மட்டுமன்றி தமிழ் திரைப்படத்துறையினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
அதேவேளையில் தமிழ் திரைப்படத்துறை மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com