/

பண்ணை சாராக் கடன் வட்டி குறைப்புத் திட்டம் அமல்படுத்தப்படுமா?

"கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற தாரக மந்திரத்துடன் கூட்டுறவுத் துறை, கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அமைத்து, பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன்

News image
Updated On :29 ஜனவரி 2018, 5:17 am

வை. இராமச்சந்திரன்

"கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற தாரக மந்திரத்துடன் கூட்டுறவுத் துறை, கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அமைத்து, பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன் மற்றும் இதர வேளாண் தேவைகளான பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், விவசாயம் இல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், வீட்டு அடமானக் கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. 
மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதை போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. ரேஷன் கடைகள், மலிவுவிலை மருந்தகங்கள், பொதுசேவை மையங்கள் ஆகியவற்றையும் நடத்தி வருகிறது.
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மாவட்டந்தோறும் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் கொடுக்கிறது. மத்தியக் கூட்டுறவு வங்கிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் கடன் வழங்குகிறது. 
தமிழகத்தைப் பொருத்தளவில் 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் வசதிகள், இடுபொருள்கள் உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர். கடன்பெறும் விவசாயிகள், சிறு தொழில்புரிவோர், சிறு தவணை கடன்களை 2 முதல் 15 மாதங்களுக்குள்ளும், நடுத்தர தவணை கடன்களை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள்ளும் திருப்பிச் செலுத்துதல் வேண்டும். 
விவசாயம் சிறப்பாக இருக்கும் காலங்களில், அதை சார்ந்துள்ள இதர தொழில்களும் சிறப்பாக இருக்கும். இதனால், விவசாயிகள், சிறுதொழில் புரிவோர் தாங்கள் வாங்கும் கடன்களுக்கு, அசல் மற்றும் வட்டித்தொகையை எளிதாக திருப்பிச் செலுத்தி விடுவர். அதே நேரம், வறட்சி காலங்களில் இவர்களால் கடன்தொகையை திருப்பிச் செலுத்த முடிவதில்லை. 
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் புரிவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் வாங்கிய பலர், வாங்கிய கடன்களுக்கான அசல் மட்டுமல்ல, வட்டிகூட திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
உரிய தவணை காலத்துக்குள் அசலும், வட்டியும் சேர்த்து கட்டாததால், தற்போது அபராத வட்டியுடன் சேர்த்து மிகப் பெருந்தொகையாகி, விவசாயிகள் மற்றும் சிறு தொழில் புரிவோருக்கு கூடுதல் சுமையாக மாறிவிட்டது.
அண்மையில் தமிழக அரசால் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 5 ஏக்கருக்குள் நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர். அதே நேரத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இத்தகைய சிரமங்கள் இவர்களுக்கு மட்டுமல்லாமல், வாராக்கடன் அளவு மிக அதிகமாகிக்கொண்டே போவதால், கூட்டுறவு கடன் சங்கங்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. தங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியாமலும், அன்றாட தேவைகளை நிறைவு செய்துகொள்ளவே திணறும் நிலைக்கும் சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. 
பண சுழற்சி இருந்தால் மட்டுமே கூட்டுறவு கடன் சங்கங்களும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். மாறாக பணம் அப்படியே கடன் நிலுவைத் தொகையாக தேங்கி விட்டதால், பணசுழற்சி இன்றி பல கூட்டுறவு கடன் சங்கங்கள் நிர்வாகம் செய்ய முடியாமல் ஸ்தம்பித்துள்ளன. 
ஏற்கெனவே 2010இல் அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தரவேண்டிய 4% இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வாராக்கடன்களும் அதிகரித்துள்ளதால், சங்கங்களை காப்பாற்ற
கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளதாக கூட்டுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய பிரச்னைகளில் இருந்து விவசாயிகளையும், சிறுதொழில் புரிவோரையும், சங்கங்களையும் காப்பாற்ற வேண்டுமானால், தமிழக அரசு தலையிட்டு, தேவையான நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். 
அதற்கு ஒரே வழி கூட்டுறவு கடன் சங்கங்கள் கொடுத்துள்ள கடன்கள் திரும்ப செலுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அதே நேரத்தில் வாராக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டுமானால், கடனை எளிதாக திருப்பிச் செலுத்தும் வகையில் அரசு ஏதேனும் சலுகைத் திட்டம் அறிவித்தால் மட்டுமே சாத்தியமாகும். இதன் மூலம் கூட்டுறவு கடன் சங்கங்கள் தன்னெழுச்சி பெறும்.
இதுபோன்ற காலகட்டங்களில், பண்ணை சாராக் கடன்களுக்கு வட்டி குறைப்புத் திட்டங்களை அரசு அறிவிப்பது சிறு தொழில் புரிவோரையும், விவசாயிகளையும், கூட்டுறவு சங்கங்களையும் காக்கும். 
கடந்த 2010இல், வசூலிக்க இயலாத பண்ணை சாராக் கடன்களை வசூலிக்க தமிழக அரசால் சிறப்பு கடன் வசூல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அசல் தொகையுடன், கடன் வழங்கிய நாளிலிருந்து 6% வட்டியை மட்டும் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. இதனால் சங்கங்களுக்கு ஏற்படும் இழப்புக்காக 4% இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும் எனத் தெரிவித்தது. இத்திட்டத்தால் மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவற்றில் வாராக் கடன்கள் மிக அதிகளவில் ஒரே தவணையில் திரும்ப செலுத்தப்பட்டன. தற்போதும் அரசு ஏதேனும் சலுகைத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினால் சங்கத்தையும், விவசாயிகளையும், சிறுதொழில் புரிவோரையும் காப்பாற்ற முடியும்.
பண்ணை சாராக் கடன் வட்டிக் குறைப்பு திட்டம்: சங்கத்தையும், விவசாயிகளையும், சிறுதொழில் புரிவோரையும் காப்பாற்றும் வகையில், தமிழக அரசு பண்ணை சாராக் கடன்களுக்கான வட்டிக் குறைப்பு திட்டத்தை அறிவித்து, அதன்படி, நிலுவையில் உள்ள
மொத்த கடன்தொகையையும் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தினால் அபராத வட்டி, கூட்டுவட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்து, அசல் தொகையுடன், கடன் வழங்கிய நாளிலிருந்து மிகக் குறைந்த சதவீத வட்டியை கணக்கிட்டு, வாராக் கடன்தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்; நிலுவையில் உள்ள மொத்த வாராக் கடன்தொகையையும் எளிய தவணையாக குறைந்த கால அவகாசம் கொடுத்து, அசல் தொகையுடன், கடன் வழங்கிய நாளிலிருந்து மிகக் குறைந்த சதவீத வட்டியை கணக்கிட்டு, வாராக் கடன்தொகைகளை திருப்பிச் செலுத்த வைத்தல் போன்ற சலுகைத் திட்டங்களை வழங்கலாம்.
கூட்டுறவு சங்கங்களுக்கு வாராக்கடன் திரும்ப வரும் பட்சத்தில், சங்கம் லாபத்துடன் இயங்கும் வாய்ப்பு ஏற்படும். சங்கம் சுயமாகவே எழுச்சி பெறும். 
எனவே, கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள கடன் தொகைகளை திருப்பிச் செலுத்த ஏதுவாக, வாராக் கடன்களை எளிதில் வசூலிக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் பண்ணை சாராக் கடன்களை பெற்றுள்ள சிறுதொழில் புரிவோருக்கு தமிழக அரசு, சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள், சிறுதொழில் புரிவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் க.முத்துப்பாண்டியன் கூறியது: கூட்டுறவு கடன் சங்கங்கள் வணிக வங்கிகளுக்கு இணையாக விவசாயக் கடன்கள் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ணை சாராக் கடன்களுக்கும், 2016 பயிர்க்கடன் தள்ளுபடியில் தள்ளுபடி கிடைக்காத இதர விவசாயிகளுக்கும் வட்டிச் சலுகை அறிவித்தால், கூட்டுறவு கடன் சங்கங்கள் தவணை தவறிய கடனை வசூல் செய்து, புதிய கடன் வழங்கி விவசாயிகள் பயன்பெறுவர். 
வணிக வங்கிகள் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்கும்போது கணினி சிட்டா மட்டும் பெற்றுக்கொண்டு வேறு ஆவணங்கள் ஏதுமின்றி 4% வட்டிக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகின்றன. 
இதே எளிமையான நடைமுறையை கடைப்பிடிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். 0% வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்குவதை மாற்றி, அனைத்து விவசாயிகளுக்கும் ஆவணங்கள் இன்றி 4 % வட்டியில் நகைக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாநிலம் முழுவதும் பல ஆயிரம் கோடிக்கு நகைக்கடன் நிலுவை
அதிகரித்து சங்கங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையை மாற்ற அரசு வட்டிச் சலுகைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.