டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: ஜூலை 23 முதல் விசாரணை துவக்கம் 

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஜூலை  23 முதல் ஜூலை  27 வரை நடைபெறுமென்று நீதிபதி சத்யநாராயணன் அறிவித்துள்ளார்.   

News image
Updated On :4 ஜூலை 2018, 11:47 am

DIN

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஜூலை  23 முதல் ஜூலை  27 வரை நடைபெறுமென்று நீதிபதி சத்யநாராயணன் அறிவித்துள்ளார்.   

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவரிடம் புகார் அளித்தார். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

அவர்களில் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே. ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்; எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் என்றும் மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர் பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க 3 ஆவது நீதிபதியாக எம்.சத்யநாராயணனை நியமித்து, வழக்கை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்யநாராயணன் முன் இந்த வழக்கு புதன்கிழமை மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விசாரணை ஜூலை  23 அன்று மதியம் 2.15 மணிக்கு நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அத்துடன் அன்று துவங்கி ஜூலை  27 வரை தினமும் மதியம் விசாரணை நடைபெறுமென்றும் அறிவித்த நீதிபதி சத்யநாராயணன், வழக்கினை ஜுலை 23 க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.