/

இளைஞர் கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் அரிசி கடத்தல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :9 ஜூலை 2018, 7:58 pm

சேலத்தில் அரிசி கடத்தல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் (25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரௌடிகள் சிலருக்கும் நியாயவிலைக் கடைகளில் அரிசி வாங்கி கேரளத்துக்கு கடத்துவதில் மோதல் இருந்து வந்தததாக எழுந்த புகாரின்பேரில், சேலம் மாநகரக் காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில், 2010-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய மோகனை, குகை பாலம் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ரௌடிகள் முரளி, கார்த்தி, மூர்த்தி, சண்முகபாண்டியன், ஆறுமுகம், வெங்கடேசன், அரைமூக்கன் (எ) செல்வகுமார், சதீஷ் (எ) வளத்தி சதீஷ்குமார், மேட்டூர் ரகு, அய்யாவு (எ) செல்வம் ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளி வந்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சதீஷ் (எ) வளத்தி சதீஷ்குமார் இறந்தார். 
வழக்கை விசாரித்த நீதிபதி எழில் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். அதில் அய்யாவு (எ) செல்வத்தை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதர நபர்களான முரளி, கார்த்தி, மூர்த்தி, சண்முகபாண்டியன், ஆறுமுகம், வெங்கடேசன், செல்வகுமார், மேட்டூர் ரகு ஆகிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.