சென்னை: நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மு.க. ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் அண்மையில் நடந்த வருமான வரிச் சோதனைகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுவை ஆளுநரிடம் அளித்தேன்.
அரசுப் பணி டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
முதல்வர் பழனிசாமியின் மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தி மற்றும் அவரது உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.189 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது.
அவ்வளவு ஏன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலகத்தில் 4 கோடி அளவுக்குப் பணம் சிக்கியது.
முதல்வர் பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலைத் துறை டெண்டர்கள் அவரது சம்பந்திக்கு வழங்கப்பட்டிருப்பது இதன் மூலம் பகிரங்கமாகத் தெரிய வந்துள்ளது. அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசின் நிதி மூலமாக நடக்கும் திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். நாங்கள் முன் வைத்த கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கத் தவறினால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







