திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி: தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தரவு 

திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி: தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தரவு 

ஜாதிப் பிரச்னையால் பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டுமென்று தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புது தில்லி: ஜாதிப் பிரச்னையால் பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டுமென்று தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம்,  குட்டகம் ஊராட்சி, திருமலைக்கவுண்டம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் பழனிசாமி (50).  கூலித் தொழிலாளி.  அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றியத் தலைவர்.  இவரது மனைவி பாப்பாள் (42). 

இந்நிலையில்,  பாப்பாள் சத்துணவு சமையலராக கந்தாயிபாளையம் தொடக்கப் பள்ளியில் 2006 ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அங்கு ஒரு சமுதாயத்தினர்,  "இவர் சமையல் செய்யக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அதே ஊராட்சியில் உள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.  

அங்கும் ஒரு சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால்,  அவர் அடுத்ததாக சேவூர் ஊராட்சி வையாபுரிக் கவுண்டன்புதூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு மீண்டும் 2006 மார்ச் மாதம் பணி மாறுதல் செய்யப்பட்டார். 

இதைத் தொடர்ந்து, அங்கிருந்து சேவூர் ஊராட்சி ஒச்சாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு 2006 ஜூன் 24ஆம் தேதி பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.  அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து தனது சொந்த ஊரான திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்ற அவருக்கு கடந்த ஜூன் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து அந்தப் பள்ளிக்கு சென்ற சமையலர் பாப்பாளை,  ஒரு சமுதாயத்தினர் சமையல் செய்யக் கூடாது எனத் தடுத்துள்ளனர். இதனால் தொடர்ந்து பல 16 நாள்களாக சமையல் செய்யாமல், பள்ளிக்கு மட்டும் சென்று வந்துள்ளார். இவருக்கு மாற்றாக வேறு நபர் சமையல் செய்து வந்துள்ளார். 

இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தபோது,  ஜூலை 17 ஆம் தேதி மீண்டும் திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளியில் பணியில் சேர ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து,  பாப்பாள்,

அப்பள்ளிக்கு சென்று, அமைப்பாளர் தங்கமணியிடம் ஆணையை வழங்கி பணி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு சமுதாயத்தினர், ஜாதியின் பெயரைச் சொல்லி "எங்களது சமுதாய மாணவர்களுக்கு நீ சமைக்கக் கூடாது' என பாப்பாளைத் தடுத்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் பாப்பாள் புகார் தெரிவித்துவிட்டு, புதன்கிழமை காலை (ஜூலை 18) மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வந்த ஒரு சமுதாயத்தினர், பாப்பாளைப் பணி செய்ய விடாமல் தடுத்து,  அரசுப் பள்ளியின் கதவையும் பூட்டியுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து,  ஏற்கெனவே பணியாற்றிய ஒச்சாம்பாளையம் பள்ளிக்கே பாப்பாளை இடமாறுதல் செய்து ஒன்றிய ஆணையர் மீனாட்சி மூலம் ஆணை வழங்கப்பட்டது. 

இதை ஏற்க மறுத்த பாப்பாள் இதுகுறித்து சேவூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகார் அளித்தார்.  இந்நிலையில் பல்வேறு தலித் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் திருமலைக்கவுண்டம்பாளையம்  அரசு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையறிந்து அங்கு வந்த ஒன்றிய ஆணையர் மீனாட்சி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் சேவூர் கைக்காட்டி பகுதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பிறகு அங்கு வந்த சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் ரமேஷ்குமார்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தனித் துணை ஆட்சியர் சகுந்தலாதேவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில்,  திருமலைக்கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பாப்பாள் பணியாற்றுவார். மேலும், இப்பிரச்னை குறித்து புகார் தெரிவிக்காத தலைமையாசிரியர் சசிகலா மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல ஒன்றிய ஆணையர் மீனாட்சி மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பாப்பாளை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டி சமையல் செய்ய விடாமல் தடுத்து, பள்ளியைப் பூட்டியவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படும் என சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் தெரிவித்தார். 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்யும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக் கூறி சேவூர் காவல் நிலையம் பகுதியில் பொதுமக்கள் இரவு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வன்கொடுமைச் தடுப்பு சட்டம், அரசுப் பணியாளரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பொது இடங்களில் தகராறில் ஈடுபடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருமலைக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, ராஜாமணி, மணியாள், சக்திவேல், சின்னதம்பி, சண்முகம், ராமமூர்த்தி, ராசு, சுமதி உள்ளிட்ட  75 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து சமூகநீதி கட்சி மாநிலத் தலைவர் என்.பன்னீர்செல்வம் தில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் இப்பிரச்னை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் 3 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர்  ஜூலை 30 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் கூட்டத்தில் ஆஜராக வேண்டும் என்று   தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விரிவான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன:

திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.

அவரை பணிமாறுதல் செய்து தமிழக அரசு பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.சி  / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com