தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலன்களைக் காக்க சட்ட வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவனங்கள் அரசால் மூட இருப்பது குறித்து, சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் அர.சக்கரபாணி, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, கோ.வி.செழியன் ஆகியோர் வியாழக்கிழமை கவனஈர்ப்பு அறிவிப்பு அளித்திருந்தனர். அதில் க.பொன்முடி பேசினார். அப்போது நடந்த விவாதம்:-
க.பொன்முடி: ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ படித்தவர்களே தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். ஆனால், இன்று பி.எட். படித்தவர்கள்கூட தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் சூழல் உள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை 20 மாவட்டங்களில் மூடப் போவதாக அறிவிப்புச் செய்துள்ளீர்கள். பயிற்சி பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: ஆசிரியர் பயிற்சி மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. மாணவர்கள் குறைவாக இருப்பதாலேயே அரசு பரிசீலித்து வருகிறது. இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தேர்வினை 2,41,555 ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்கள் எழுதி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்களும் வெகுவாக குறைந்துள்ளதன் அடிப்படையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு விரும்பம் காட்டுவதில்லை.
சட்ட வழிமுறைகள்: ஆசிரியர் பட்டயம், பட்டப் படிப்பு படித்துள்ள பலர் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் அவர்கள் திடீரென வெளியேற்றப்படும் நிலை உள்ளது. எனவே, இதற்கான சட்ட வழிமுறைகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகளே உள்ளனர். 40 மாணவர்கள் இருந்திட வேண்டும். ஆனாலும், இந்தப் பள்ளிகளை மூடாமல், அவற்றில் மாணவர்களைச் சேர்க்க செப்டம்பர் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்






