தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது மாநில சுயாட்சிக்கு எதிரானதா?: திமுக - அதிமுக விவாதம்

பெட்ரோல் - டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது மாநில சுயாட்சிக்கு எதிரானதா என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் வியாழக்கிழமை விவாதம்

Updated On :29 ஜூன் 2018, 2:00 am IST

பெட்ரோல் - டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது மாநில சுயாட்சிக்கு எதிரானதா என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் வணிக வரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, வணிகர்களுக்கு திமுக செய்த சாதனைகளைக் குறிப்பிட்டதுடன், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் குறுக்கிட்டுக் கூறியது: மாநில சுயாட்சிக்கு ஆதரவாக திமுக குரல் கொடுக்கிறதா, இல்லையா என்பதை விளக்க வேண்டும். தற்போது மதுபானம் மற்றும் பெட்ரோல், டீசலும்தான் மாநிலங்களுக்கு வருவாயைத் தரக்கூடியவையாக இருக்கின்றன. அதுவும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரம்புக்குள் சென்றுவிட்டால் அரசுக்கான வருமானம் எப்படி வரும்? நிதி உதவிக்காக மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கும். 
எனவே, மாநில சுயாட்சியை நிலைநிறுத்தும் வகையிலும், தமிழகம் நிதிநிலையில் தன்னாட்சி பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் பெட்ரோல் - டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டாம் என்று கோருவதாகக் கூறினார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: திமுக உறுப்பினர் பேசும்போது நுகர்வோர், வணிகர்களுக்கு திமுகதான் நன்மை செய்ததைப்போல கூறுகிறார். ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்தது. அப்போது, பொதுக்குழுவைக் கூட்டி அந்நிய நேரடி முதலீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், கருணாநிதியை அவரது இல்லத்தில் குலாம்நபி ஆசாத் பார்த்துச் சென்ற பிறகு, நாடாளுமன்றத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரித்து திமுக வாக்களித்தது என்பதை மட்டும் இந்த நேரத்தில் குறிப்பிடுகிறேன்.
பொன்முடி (திமுக): மாநில சுயாட்சிக் கொள்கையில் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் என்றால், ஜிஎஸ்டி வரியையே ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. எல்லாப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, பெட்ரோல் - டீசலுக்கு மட்டும் வேறுவகையில் வரி விதிப்பது ஏன் என்றுதான் கேட்கிறோம். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலைக் கொண்டு வரும்போது, பெட்ரோல் விலை குறையும். அதன் காரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் குறையும்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: திமுக ஆட்சியில் மதிப்புக்கூட்டு வரியை அமல்படுத்தியபோது, தமிழகத்துக்கு ரூ.6,000 கோடி இழப்பீட்டு தொகை தரப்படும் என்று மத்திய காங்கிரஸ் அரசு அறிவித்து, கடைசி வரை தரவே இல்லை. ஆனால், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியபோது மாநில உரிமைகளைக் காக்கக்கூடிய அத்தனை நிபந்தனைகளையும் மத்திய அரசை ஏற்கச் செய்தோம். மத்திய அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையையும் பெற்று வருகிறோம். 
தமிழகம் நிதி தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மாநில சுயாட்சி உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவும்தான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரத் தேவையில்லை எனக் கருதுவதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.